கேப்டவுன்,
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து, இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித்தொடர் நடைபெற உள்ளது.
இவ்விரு அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி டர்பனில் நடைபெற உள்ளது. ஏற்கனவே, டெஸ்ட் தொடரை பறிகொடுத்த இந்திய அணி, ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது.
அதேவேளையில், தென் ஆப்பிரிக்க அணியும் சொந்த மண்ணில் தனது முழு பலத்தையும் வெளிக்காட்டி இந்திய அணியை வீழ்த்த திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரரும் அதிரடி மன்னனுமான டி வில்லியர்ஸ் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, இந்தியாவுக்கு எதிரான முதல் 3 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
டி வில்லியர்ஸ் விலகியிருப்பது தென் ஆப்பிரிக்க அணிக்கு கடும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை டி வில்லியர்ஸ் வெளிப்படுத்தியிருந்த நிலையில், முதல் 3 ஒருநாள் போட்டிகளில் இருந்து டி வில்லியர்ஸ் விலகியிருப்பது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. #INDvsSA | #ABDeVilliers