கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி லோகேஷ் ராகுலின் சதம் வீண்

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. லோகேஷ் ராகுல் சதம் அடித்தும் பலன் இல்லை.

மவுன்ட் மாங்கானு,

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நேற்று நடந்தது. இந்திய அணியில் ஒரு மாற்றமாக கேதர் ஜாதவ் நீக்கப்பட்டு மனிஷ் பாண்டே சேர்க்கப்பட்டார். நியூசிலாந்து அணியில் தோள்பட்டை காயத்தால் ஓய்வில் இருந்த கேப்டன் கேன் வில்லியம்சன் திரும்பினார். இதே போல் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெரும் இடம் பிடித்தார். மார்க் சாப்மன், டாம் பிளன்டெல் கழற்றி விடப்பட்டனர்.

டாஸ் ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தார். இதன்படி பிரித்வி ஷாவும், மயங்க் அகர்வாலும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். இந்த முறையும் இந்தியாவுக்கு தொடக்கம் கசப்பாகவே அமைந்தது. மயங்க் அகர்வால் (1 ரன்), கைல் ஜாமிசன் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலியும் ஏமாற்றம் அளித்தார். வேகப்பந்து வீச்சாளர் ஹாமிஷ் பென்னட் ஷாட்பிட்ச்சாக வீசிய பந்து எழும்பி வந்த போது அதை ஆப்-சைடில் கோலி (9 ரன்) அடிக்க, தேர்டுமேன் திசையில் நின்ற ஜாமிசன் கேட்ச் செய்தார். இந்த நியூசிலாந்து பயணத்தில் கோலி முதல்முறையாக ஒற்றை இலக்கத்தில் நடையை கட்டினார்.

3-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யர் இறங்கினார். மறுமுனையில் பென்னட்டுவின் ஒரே ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விரட்டி அட்டகாசப் படுத்திய பிரித்வி ஷா, தேவையில்லாமல் 2-வது ரன்னுக்கு ஆசைப்பட்டு விக்கெட்டை ரன்-அவுட்டில் பறிகொடுத்தார். பிரித்வி ஷா 40 ரன்கள் (42 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.

அப்போது இந்தியா 3 விக்கெட்டுக்கு 62 ரன்களுடன் (12.1 ஓவர்) தத்தளித்துக் கொண்டிருந்தது. இந்த சூழலில் ஸ்ரேயாஸ் அய்யருடன், விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுல் கைகோர்த்தார். அவசரம் காட்டாமல் பொறுப்புடன் விளையாடிய இவர்கள் அணியை சிக்கலில் இருந்து மீட்டெடுத்தனர். இந்தியா 20-வது ஓவரில் 100 ரன்களை தொட்டது.

பந்தை அவ்வப்போது பவுண்டரிக்கு அனுப்பிய இந்த ஜோடி ஸ்கோரை சீரான வேகத்தில் நகர்த்தியது. ஸ்கோர் 162 ரன்களை எட்டிய போது ஸ்ரேயாஸ் அய்யர் (62 ரன், 63 பந்து, 9 பவுண்டரி) கேட்ச் ஆனார். ராகுல்-ஸ்ரேயாஸ் கூட்டணி 4-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் திரட்டியது கவனிக்கத்தக்கது.

இதையடுத்து லோகேஷ் ராகுலும், மனிஷ் பாண்டேவும் ஜோடி சேர்ந்து அணியின் ரன்ரேட்டை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்தினர். உயரமான பவுலர் ஜாமிசனின் பந்து வீச்சில் சூப்பராக ஒரு சிக்சரை பறக்க விட்ட ராகுல் நிலைத்து நின்று ஆடி தனது 4-வது சதத்தை நிறைவு செய்தார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்த நிலையில் பிரிந்தது. பென்னட்டுவின் பந்து வீச்சில் ராகுல் பந்தை தூக்கியடித்த போது அதை எல்லைக்கோடு அருகே நின்ற ஜாமிசன் நழுவ விட்டார். பந்து அவரது கையில் பட்டு சிக்சராக மாறியது. அடுத்த பந்தையும் அதே போல் ராகுல் (112 ரன், 113 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசிய போது இந்த தடவை ஜாமிசன் கேட்ச் செய்து பரிகாரம் தேடிக்கொண்டார். அடுத்த பந்தில் மனிஷ் பாண்டேவும் (42 ரன், 48 பந்து, 2 பவுண்டரி) சிக்சருக்கு முயற்சித்து ஆட்டம் இழந்தார். இருவரும் அடுத்தடுத்த பந்தில் அவுட் ஆனதால், 300 ரன்களை எட்ட முடியாமல் போய் விட்டது. கடைசி கட்டத்தில் நவ்தீப் சைனி 2 பவுண்டரி அடித்து ஆறுதல் அளித்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 297 ரன்கள் இலக்கை நோக்கி களம் புகுந்த நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் மார்ட்டின் கப்திலும், ஹென்றி நிகோல்சும் அதிரடியாக மட்டையை சுழட்டினர். குறிப்பாக கப்தில், இந்திய பந்து வீச்சை நொறுக்கினார். சைனி, பும்ரா, ஷர்துல் தாகூர் ஆகியோரது ஓவர்களில் சொல்லி வைத்தார் போல் தலா ஒரு சிக்சர், பவுண்டரி வீதம் விரட்டியடித்து உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினார். முதல் 15 ஓவர்கள் வரை இந்த ஜோடியை அசைக்க முடியவில்லை.

அணியின் ஸ்கோர் 106 ரன்களை (16.3 ஓவர்) எட்டிய போது கப்தில் (66 ரன், 46 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) யுஸ்வேந்திர சாஹலின் சுழற்பந்து வீச்சை தடுத்து ஆட முற்பட்டு கிளன் போல்டு ஆனார். அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் (22 ரன்), ராஸ் டெய்லர் (12 ரன்) சீரான இடைவெளியில் பெவிலியன் திரும்பினர்.

இதற்கிடையே இரண்டு முறை ரன்-அவுட் கண்டத்தில் இருந்து தப்பித்த நிகோல்ஸ் 80 ரன்களில் (103 பந்து, 9 பவுண்டரி) விக்கெட் கீப்பர் ராகுலிடம் பிடிபட்டார். ஜேம்ஸ் நீஷமும் (19 ரன்) நீண்ட நேரம் நிற்கவில்லை.

ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 223 ரன்களுடன் தடுமாற்றத்திற்கு உள்ளானது. கடைசி 10 ஓவர்களில் அவர்களின் வெற்றிக்கு 74 ரன் தேவைப்பட்டதால் இந்தியாவுக்கும் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. ஆனால் 6-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் டாம் லாதமும், காலின் டி கிரான்ட்ஹோமும் இணைந்து இந்தியாவின் உத்வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டனர்.

கிரான்ட்ஹோம், இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்தார். ஷர்துல் தாகூரின் ஒரே ஓவரில் 3 பவுண்டரியும், ஒரு சிக்சரும் தெறிக்க விட்டார். அவரது வாணவேடிக்கையால் ஆட்டம் அவர்கள் பக்கம் திரும்பியது. 21 பந்துகளில் 50 ரன்களை கடந்த கிரான்ட்ஹோம் இந்தியாவுக்கு எதிராக குறைந்த பந்தில் அரைசதம் அடித்த நியூசிலாந்து வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.

நியூசிலாந்து அணி 47.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கிரான்ட்ஹோம் 58 ரன்களுடனும் (28 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), லாதம் 32 ரன்களுடனும் (34 பந்து, 3 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. ஏற்கனவே ஹாமில்டன், ஆக்லாந்தில் நடந்த ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. நிகோல்ஸ் ஆட்டநாயகன் விருதையும், ராஸ் டெய்லர் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.

20 ஓவர் தொடரை 0-5 என்ற கணக்கில் இழந்த நியூசிலாந்து அணி அதற்கு ஒரு நாள் போட்டியின் மூலம் சுடச்சுட பதிலடி கொடுத்து விட்டது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்