கொழும்பு,
இந்தியா இலங்கை அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடங்குகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலேயில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 10 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா இலங்கை அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கொழும்பில் உள்ள எஸ்.எஸ்.சி. ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
தொடக்க டெஸ்டில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் இந்திய அணியின் செயல்பாடு பாராட்டும்படி இருந்தது. ஷிகர் தவான், கேப்டன் விராட் கோலி, புஜாரா ஆகியோர் சதம் விளாசினர். பந்து வீச்சாளர்களும் தங்களது பணியை கச்சிதமாக செய்து முடித்தனர். இந்த போட்டியிலும் அதே உத்வேகத்துடன் விளையாடி தொடரை கைப்பற்றும் வேட்கையில் நமது வீரர்கள் இருக்கிறார்கள். புஜாராவுக்கு இது 50வது டெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வழக்கமான இந்திய தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் முதலாவது டெஸ்டில் ஆடவில்லை. இப்போது அவர் குணமடைந்து விட்டார். இந்த டெஸ்டில் அவர் ஆடுவது உறுதி என்று கேப்டன் விராட் கோலி திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார்.
அவரது வருகையால் தமிழகத்தை சேர்ந்த அபினவ் முகுந்தின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. காலே டெஸ்டில் 2வது இன்னிங்சில் முகுந்த் 81 ரன்கள் எடுத்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் 190 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை பெற்றார். இதனால் தவானின் இடத்திற்கு ஆபத்து இல்லை. முகுந்து தான் வழிவிட வேண்டி இருக்கும். மற்றபடி இந்திய அணியில் மாற்றம் ஏதும் இருக்காது.
காலே டெஸ்டில் படுதோல்வி அடைந்த இலங்கை அணி தோல்வியில் இருந்து எழுச்சி பெற முயற்சிக்கும். நிமோனியா காய்ச்சலால் முதலாவது டெஸ்டில் ஆடாத கேப்டன் தினேஷ் சன்டிமால் களம் திரும்புவது அந்த அணிக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய செய்தியாகும். அணியில் 3வது சுழற்பந்து வீச்சாளராக புதுமுக வீரர் புஷ்பகுமாராவை சேர்ப்பது குறித்து அணி நிர்வாகம் யோசித்து வருகிறது.
இந்த மைதானத்தில் இந்தியாவும், இலங்கையும் இதுவரை 8 டெஸ்டில் மோதியுள்ளன. அதில் இவ்விரு அணிகளும் தலா 2ல் வெற்றி கண்டன. 4 டெஸ்ட் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
காலே மைதானத்துடன் ஒப்பிடும் போது இந்த ஆடுகளம் உலர்ந்து இருப்பது போல் தெரிகிறது. அதனால் 4வது நாளில் இருந்து சுழற்பந்து வீச்சின் தாக்கம் அதிகமாக இருக்கும். டாஸ் ஜெயிக்கும் அணி முதலில் பேட் செய்யவே விரும்பும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:
இந்தியா: லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, அஸ்வின், விருத்திமான் சஹா, ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா அல்லது குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது ஷமி.
இலங்கை: உபுல்தரங்கா, கருணாரத்னே, குசல் மென்டிஸ், சன்டிமால் (கேப்டன்), மேத்யூஸ், நிரோஷன் டிக்வெல்லா, தனஞ்ஜெயா டி சில்வா, தில்ருவான் பெரேரா, ஹெராத், மலின்டா புஷ்பகுமாரா, நுவான் பிரதீப்.
காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.