வெலிங்டன்,
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. நியூசிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 460 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹென்றி நிகோல்ஸ் 174 ரன்கள் சேர்த்தார். அடுத்து ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 131 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது.
பாலோ-ஆன் ஆனதை தொடர்ந்து 329 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து இருந்தது. கேப்டன் ஜாசன் ஹோல்டர் 60 ரன்னுடனும், ஜோஷூவா டா சில்வா 25 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. மேலும் 85 ரன்கள் எடுத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கலாம் என்ற நிலையுடன் தொடர்ந்து ஆடிய ஜாசன் ஹோல்டர் (61 ரன்கள்), டிம் சவுதி பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். அடுத்து களம் இறங்கி அதிரடியாக ஆடிய அல்ஜாரி ஜோசப் (24 ரன்கள், 12 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) டிம் சவுதி பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் வாட்லிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அறிமுக போட்டியில் முதல் அரைசதம் அடித்த விக்கெட் கீப்பர் ஜோஷூவா டா சில்வா (57 ரன்கள்) நீல் வாக்னெர் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
கடைசி விக்கெட்டாக ஷனோன் கேப்ரியல் ரன் எதுவும் எடுக்காமல் நீல் வாக்னெர் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். வெஸ்ட்இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 79.1 ஓவர்களில் 317 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. செமார் ஹோல்டர் 13 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். நியூசிலாந்து அணி தரப்பில் டிரென்ட் பவுல்ட், நீல் வாக்னெர் தலா 3 விக்கெட்டும், டிம் சவுதி, கைல் ஜாமிசன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். நியூசிலாந்து வீரர்கள் ஹென்றி நிகோல்ஸ் (முதல் இன்னிங்சில் சதம் அடித்தவர்) ஆட்டநாயகன் விருதும், இரண்டு டெஸ்டிலும் சேர்த்து 11 விக்கெட்டுகள் வீழ்த்திய கைல் ஜாமிசன் தொடர்நாயகன் விருதும் பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. ஹாமில்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் அங்கமான இந்த தொடர் மூலம் நியூசிலாந்து அணி 120 புள்ளிகளை அள்ளியது. அத்துடன் உள்ளூரில் கடைசியாக ஆடிய 15 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்ததில்லை என்ற சிறப்பையும் நியூசிலாந்து அணி நீட்டித்துள்ளது.
டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியலில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. முதல் 2 இடங்களில் முறையே ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் உள்ளன. அத்துடன் இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை நெருங்கி இருக்கிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் தலா 116 புள்ளிகளை பெற்று இருந்தாலும், தசமபுள்ளி வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி (116.461 புள்ளிகள்) தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து அணி (116.375 புள்ளிகள்) 2-வது இடம் வகிக்கிறது. இந்திய அணி 114 புள்ளிகளுடன் 3-வது இடமும், இங்கிலாந்து அணி 106 புள்ளிகளுடன் 4-வது இடமும், இலங்கை அணி 91 புள்ளிகளுடன் 5-வது இடமும் பெற்றுள்ளன.
நியூசிலாந்து அணி அடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் வருகிற 26-ந் தேதியும், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் ஜனவரி 3-ந் தேதியும் தொடங்குகிறது. இந்த போட்டி தொடரை நியூசிலாந்து அணி முழுமையாக கைப்பற்றினால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு முன்னேறவும், தரவரிசையில் முதலிடத்தை பிடிக்கவும் வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே வருகிற 17-ந் தேதி தொடங்கும் 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரின் முடிவை பொறுத்து இரு அணிகளின் தரவரிசையில் ஏற்றம், இறக்கம் அமையும்.