கிரிக்கெட்

"உண்மைக்கு உரிய நீதி சரியான நேரத்தில் கிடைக்கும்" - பிரித்வி ஷாவின் வருங்கால மனைவி பரபரப்பு பதிவு

கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவும் சமூக ஊடக பிரபலமும், நடிகையுமான அக்ரிதி அகர்வாலும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

சென்னை,

"உண்மைக்கு உரிய நீதி சரியான நேரத்தில் கிடைக்கும்" என பிரித்வி ஷாவின் வருங்கால மனைவி அக்ரிதி அகர்வால் பரபரப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மர்மமான பதிவு

கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா சமீபத்தில் சமூக ஊடக பிரபலம் அக்ரிதி அகர்வாலை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்த செய்தியை உலக மகளிர் தினத்தில் அவர் வெளியிட்டார்.

இதற்கிடையில், சமீபத்தில் அக்ரிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மர்மமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவு இணையத்தில் வைரலானநிலையில், இருவரும் பிரிந்துவிட்டதாக வதந்தி பரவ ஆரம்பித்தது.

முற்றுப்புள்ளி

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு, அக்ரிதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ள பதிவில்,

"நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது பதிவில் எனது காதலரின் பெயரை குறிப்பிடவில்லை. நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று நான் எங்கும் கூறவில்லை. இருந்தபோதிலும், பலர் அது அதை பற்றியதுதான் என்று முடிவு செய்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

பிரித்வி ஷா என் வாழ்க்கையின் மிக முக்கியமான நபர்களில் ஒருவர். ஆனால், நான் அக்கறை கொள்ளும் ஒரே நபர் அவர் மட்டுமல்ல. எனக்கு குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிற அன்புக்குரியவர்களும் உள்ளனர். யாருடைய பெயரையும் குறிப்பிடாத ஒரு பதிவை வைத்து இவ்வளவு பெரிய முடிவுக்கு வந்தது ஏமாற்றமளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த பதிவு தனது நெருங்கிய நண்பர்களுக்காக மட்டுமே பகிரப்பட்டதாகவும், ஒரு சிறிய தவறால் தான் நேசிக்கும் ஒருவரின் நற்பெயர் பாதிக்கப்படும் நிலை உருவானது வருத்தமளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில், அந்த பதிவு யாரை பற்றியது என்பது குறித்து விளக்கம் அளிக்க விரும்பவில்லை என்றும், "உண்மைக்கு உரிய நீதி சரியான நேரத்தில் கிடைக்கும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வதந்தி எப்படி பரவியது?

சில நாட்களுக்கு முன்பு, அக்ரிதி அகர்வால் தனது இன்ஸ்டாகிராமில், ’’எல்லாமே உண்மைதான்... சமூக வலைதளங்களில் நீங்கள் பார்ப்பதெல்லாம் உண்மைதான். நான் பலமுறை ஏமாற்றப்பட்டேன்" என்று குறிப்பிட்டிருந்தார். இதில் யாருடைய பெயரையும் அவர் குறிப்பிடவில்லை.

இருப்பினும், அந்த பதிவு பிரித்வி ஷாவை பற்றியது என்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, இருவரும் பிரிந்துவிட்டதாக வதந்திகள் பரவின.

தற்போது அக்ரிதி அகர்வால் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

SCROLL FOR NEXT