1. பகல்-இரவு டெஸ்ட் போட்டி முதல்முறையாக 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் அடிலெய்டில் நடந்தது. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் மோதிய இந்த டெஸ்ட் போட்டி வெறும் 3 நாட்களில் முடிவுக்கு வந்தது. மிளிரும் தன்மை கொண்ட பிங்க் பந்தை எதிர்கொண்டு ஆடுவதில் இரு அணி பேட்ஸ்மேன்களும் தகிடுதத்தம் போட்டனர். வேகப்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. முதல் இன்னிங்சில் முறையே நியூசிலாந்து 202 ரன்களும், ஆஸ்திரேலியா 224 ரன்களும் எடுத்தன. 22 ரன்கள் பின்தங்கிய நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் 208 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 187 ரன்கள் இலக்கை உள்ளூர் அணியான ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து தான் எட்டிப்பிடித்தது. அடிலெய்டில், 1993-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு வீரர் கூட சதம் அடிக்காத டெஸ்ட் போட்டியாக இது பதிவானது. ஆனால் இந்த 3 நாட்களிலும் மொத்தம் 1 லட்சத்து 23 ஆயிரத்து 736 ரசிகர்கள் நேரில் வந்து போட்டியை கண்டுகளித்தனர்.
2. துபாயில் நடந்த (2016-ம் ஆண்டு அக்டோபர்) இந்த டெஸ்டில் பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சந்தித்தன. இது பாகிஸ்தானின் 400-வது டெஸ்ட் என்பது இன்னொரு சிறப்பம்சமாகும். இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 579 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அசார் அலி முச்சதம் (302 ரன், 469 பந்து, 23 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். பகல்-இரவு டெஸ்டில் சதம், இரட்டை சதம், முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனைக்கு அசார் அலி சொந்தக்காரர் ஆனார். வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 357 ரன்னில் ஆட்டம் இழந்தது. அடுத்து 222 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 123 ரன்னில் சுருண்டது. சுழற்பந்து வீச்சாளர் தேவேந்திர பிஷூ 8 விக்கெட்டுகளை அள்ளினார். இதையடுத்து 346 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் டேரன் பிராவோ சதம் (116 ரன்) அடித்து போராடியும் பிரயோஜனம் இல்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி 289 ரன்களில் ஆல்-அவுட் ஆகி 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.