புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நியமனம் செய்யப்பட்டதற்கு நிர்வாக கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் ஜாகீர்கான், டிராவிட் நியமனத்தில் முடிவு எதுவும் எடுக்கப்படாததால் இழுபறி நீடிக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஆல்-ரவுண்டர் ரவிசாஸ்திரி கடந்த செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார். குறிப்பிட்ட வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் பந்து வீச்சு பயிற்சியாளராகவும், முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பேட்டிங் ஆலோசகராகவும் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜாகீர்கானுக்கு பதிலாக பரத் அருணை பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்க ரவிசாஸ்திரி முயற்சிப்பதாக செய்திகள் வெளியாயின.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் நிர்வாக கமிட்டி உறுப்பினர் வினோத் ராய், டியானா எடுல்ஜி, தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அணியின் உதவி பணியாளர்கள் ரவிசாஸ்திரியுடன் கலந்து ஆலோசித்து வருகிற 22-ந் தேதி தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆனால் ஜாகீர்கான், டிராவிட் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த விவகாரத்தில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
பயிற்சியாளர் தொடர்பாக தெண்டுல்கர், கங்குலி, லட்சுமண் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி அளித்த பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக்கொள்வதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தை கவனிக்கும் கமிட்டி, வாரிய நிர்வாகிகளின் முடிவுக்கு நேர் எதிராக செயல்பட முடிவெடுத்துள்ளது.
மேலும் புதிய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் அணியின் உதவி பணியாளர்களுக்கு எவ்வளவு? சம்பளம் வழங்குவது என்பது குறித்து நிர்ணயிக்க 4 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டியில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல் தலைவர் சி.கே.கண்ணா, தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி, நிர்வாக கமிட்டி உறுப்பினர் டியானா எடுல்ஜி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். 4 பேர் கொண்ட புதிய கமிட்டியின் கூட்டம் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. புதிய கமிட்டியினர் சம்பளம் குறித்த தங்களது சிபாரிசுகளை 22-ந் தேதி நிர்வாக கமிட்டியிடம் அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி வருகிற 19-ந் தேதி முதல் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. இலங்கை பயணத்தின் போது ஜாகீர்கான், டிராவிட் ஆகியோர் அணியினருடன் செல்வார்களா? என்பது தெளிவாக தெரியவில்லை.
நிர்வாக கமிட்டி கூட்டம் முடிந்த பிறகு கமிட்டியின் தலைவர் வினோத்ராய் கூறுகையில் , தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நியமனம் குறித்த கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியின் சிபாரிசுகள் அனைத்தும் கவனத்தில் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. மற்ற பயிற்சியாளர்கள் நியமனம் குறித்து நாங்கள் தலைமை பயிற்சியாளருடன் விவாதிக்க வேண்டி இருக்கிறது. தலைமை பயிற்சியாளருடன் கலந்து ஆலோசித்த பிறகு அந்த தகவல்களை நாங்கள் அமைத்து இருக்கும் கமிட்டியின் மூலமாக கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியினருக்கு தெரிவிப்போம்.
மேலும் தலைமை பயிற்சியாளருடன் ஆலோசித்தபிறகு உதவி பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். பயிற்சியாளர் 3 பேரும் ஒரே மையமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறோம். அதேநேரத்தில் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக ஆலோசனை நடத்த வேண்டி இருக்கிறது. அவர்களின் விருப்பம் மற்றும் இரட்டை ஆதாய பிரச்சினை இருக்கிறதா? என்பதை எல்லாம் உறுதி செய்ய வேண்டி இருக்கிறது என்றார்.