மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு டெஸ்டுகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்த நிலையில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்குகிறது. பாக்சிங் டே என்ற பாரம்பரிய சிறப்புடன் அழைக்கப்படும் இந்த டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பார்மின்றி தடுமாறும் ரோரி பர்ன்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஆலி போப், கிறிஸ் வோக்ஸ் நீக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு பதிலாக மார்க்வுட், ஜாக் லீச், ஜாக் கிராவ்லி, ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் களம் இறங்குவார்கள் என்று அந்த அணி நிர்வாகம் கூறியுள்ளது. ஆஸ்திரேலிய அணியில் முந்தைய டெஸ்டில் விளையாடாத கேப்டன் பேட் கம்மின்ஸ் திரும்புகிறார்.
காலில் லேசான காயத்தால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர் ஜய ரிச்சர்ட்சன், மைக்கேல் நேசர் கழற்றி விடப்பட்டுள்ளனர். அங்குள்ள பழங்குடியினத்தை சேர்ந்தவரான வேகப்பந்து வீச்சாளர் 32 வயதான ஸ்காட் போலன்ட் அறிமுக வீரராக இந்த டெஸ்டில் விளையாட இருப்பதாக கேப்டன் கம்மின்ஸ் தெரிவித்தார்.