நாக்பூர்,
இந்தியா இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை 205 ரன்களில் முடங்கியதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி, கேப்டன் விராட் கோலியின் இரட்டை சதம் (213 ரன்கள்), புஜரா (143 ரன்கள்), ரோகித் ஷர்மா(102 ரன்கள்) ஆகியோரின் சதத்தின் உதவியால் இந்திய அணி 610 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
பின்னர் 405 ரன்கள் பின்தங்கிய இலங்கை அணி 2வது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் சமரவிக்ரமா (0), இஷாந்த் ஷர்மா பந்தில் கிளீன் போல்டு ஆனார்.இப்படி அதிர்ச்சியுடன் தொடங்கிய இலங்கை அணி 3வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 21 ரன் எடுத்து இருந்தது. இதையடுத்து, இன்று 4-வது நாள் ஆட்டம் இன்று துவங்கியதும், இலங்கை அணியின் மோசமான ஆட்டம் நீடித்தது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை பேட்ஸ்மேன்கள் தடுமாறினார். கருணரத்னே 18 ரன்களில் ஜடேஜா பந்தில் விஜயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். திரிமண்ணே 23 ரன்களில் உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். மேத்யூஸ் 10 ரன்களில் ஜடேஜா பந்தில் தனது விக்கெட்டை தாரைவார்த்தார். தொடர்ந்து வந்த வீரர்களும் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வரிசையாய் பெவிலியன் திரும்பினர்.
79.1 ஓவர்கள் மட்டுமே விளையாடிய இலங்கை அணி 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம், ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அஷ்வின் 4 விக்கெட்டுகளையும், இஷாந்த ஷர்மா, உமேஷ் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிகெட் டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேச டெஸ்ட் அரங்கில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். 54 டெஸ்ட் போட்டிகளில் இந்த சாதனையை அஷ்வின் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் டென்னிஸ் லில்லி 56 போட்டிகளில் 300 விக்கெட்டுகள் எடுத்து இருந்ததே சாதனையாக இருந்தது.