கிரிக்கெட்

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு பின் நிகழ்ந்த பயங்கர விபத்து - ’இந்திய மக்கள் மட்டும் இல்லனா’ - மைக்கேல் கிளார்க் நெகிழ்ச்சி

ஐபிஎல் 2026 இறுதிப்போட்டிக்குப் பிறகு விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டதாக கிளார்க் கூறியுள்ளார்.

சென்னை,

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வர்ணனையாளருமான மைக்கேல் கிளார்க், இந்தியாவில் ஏற்பட்ட பயங்கர கார் விபத்தில் நூலிழையில் உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2026 இறுதிப்போட்டிக்குப் பிறகு விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

தூக்கத்தில் இருந்தபோது நிகழ்ந்த அதிர்ச்சி

சமீபத்திய கிரிக்கெட் போட்காஸ்டில் பேசிய கிளார்க், ஐபிஎல் இறுதிப்போட்டி முடிந்த பிறகு ஆஸ்திரேலியா திரும்புவதற்காக காரில் விமான நிலையம் நோக்கி பயணித்ததாக தெரிவித்தார். போட்டி முடிந்த களைப்பால் காரின் பின்புறம் தூங்கிக் கொண்டிருந்த அவர், திடீரென ஏற்பட்ட பெரும் மோதல் சத்தத்தால் கண்விழித்ததாக கூறினார்.

லாரியின் கீழ் சிக்கிய கார்

கண்விழித்துப் பார்த்தபோது, தாங்கள் பயணித்த காரின் முன்பகுதி லாரியின் பின்பகுதிக்குக் கீழ் சிக்கி நசுங்கியிருந்ததாக கிளார்க் கூறினார். முன்னால் சென்ற லாரியின் பிரேக் விளக்குகள் சரியாக எரியாததால், கார் டிரைவரால் லாரி வேகத்தைக் குறைத்ததை கவனிக்க முடியாமல் போயிருக்கலாம் என அவர் கூறினார். இந்த மோதலில் காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

டிரைவருக்கு கால் முறிவு

இந்த விபத்தில் தனக்கு பெரிய காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும், லேசான காயங்களுடன் தப்பியதாகவும் கிளார்க் கூறினார். ஆனால், டிரைவருக்கு கால் முறிவு ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பிசிசிஐ மற்றும் இந்தியர்களுக்கு நன்றி

இந்த சம்பவத்திற்குப் பிறகு தனக்கு உதவிய இந்திய மக்களுக்கும் பிசிசிஐ அதிகாரிகளுக்கும் கிளார்க் நன்றி தெரிவித்துள்ளார். இந்திய மக்களின் அன்பும், உடனடி உதவியும் காரணமாகவே பாதுகாப்பாக ஆஸ்திரேலியாவிற்கு திரும்ப முடிந்தது என கிளார்க் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.