பெங்களூரு,
லோகேஷ் ராகுல், புஜாராவின் அரை சதத்தால் இந்திய அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்து 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியாஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 189 ரன்களில் சுருண்டது. ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 8 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 2வது நாள் ஆட்டம் முடிவில் 106 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்து இருந்தது. ஷான் மார்ஷ் 66 ரன்னும், ரென்ஷா 60 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் 25 ரன்களுடனும், மிட்செல் ஸ்டார்க் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
நேற்று 3வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய மிட்செல் ஸ்டார்க் (26 ரன்) அஸ்வின் பந்து வீச்சில் ஸ்விப் ஷாட் ஆடினார். அந்த பந்தை சரியாக கணித்த ரவீந்திர ஜடேஜா பின்நோக்கி நகர்ந்து அருமையாக கேட்ச் செய்து அவரை வெளியேற்றினார்.
அடுத்த 2 ஓவர்களில் நிதானமாக ஆடிய மேத்யூ வேட் (40 ரன், 113 பந்துகளில் 4 பவுண்டரியுடன்) ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆகி நடையை கட்டினார். அடுத்து களம் கண்ட நாதன் லயன் முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட்டுகளை சாய்த்த ரவீந்திர ஜடேஜாவின் ஹாட்ரிக் முயற்சியை தடுத்த ஹேசில்வுட் (1 ரன்) அவரது அடுத்த ஓவரில் அவுட் ஆனார். கடைசி 3 விக்கெட்டையும் ரவீந்திர ஜடேஜா வேகமாக சாய்த்தார்.
ஆஸ்திரேலிய அணி தனது முன்னிலையை அதிகரிக்க எடுத்த முயற்சிக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் நேற்று சிறப்பாக செயல்பட்டு முட்டுக்கட்டை போட்டனர். நேற்று 16.4 ஓவர்களில் 39 ரன்களை மட்டுமே எடுத்த ஆஸ்திரேலிய அணி எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் மதிய உணவு இடைவேளைக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 122.4 ஓவர்களில் 276 ரன்களில் ஆல்அவுட் ஆனது. ஸ்டீன் ஓ கீபே 4 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா 6 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் ஷர்மா, உமேஷ்யாதவ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
87 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல், அபினவ் முகுந்த் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் ஆடினார்கள். மதிய உணவு இடைவேளையின் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் எடுத்து இருந்தது.
உணவு இடைவேளைக்கு பிறகு இந்திய விக்கெட்டுகள் திடீரென சரிந்தன. தொடக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்த் (16 ரன், 32 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன்) ஹேசில்வுட் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து புஜாரா, லோகேஷ் ராகுலுடன் இணைந்தார். நிலைத்து நின்று ஆடிய லோகேஷ் ராகுல் 82 பந்துகளில் 4 பவுண்டரியுடன் அரை சதத்தை எட்டினார். சிறப்பாக ஆடிய லோகேஷ் ராகுல் (51 ரன்), ஸ்டீன் ஓ கீபே வீசிய பந்தை அடித்து ஆடிய போது, சிலிப்பில் நின்ற கேப்டன் ஸ்டீவன் சுமித் அபாரமாக டைவ் அடித்து பந்தை கேட்ச் செய்து ஆட்டம் இழக்க வைத்தார்.
இதைத்தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் விராட்கோலி 25 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 15 ரன் எடுத்த நிலையில் ஹேசில்வுட் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். பந்து முதலில் பேட்டில் பட்டு தான் பேடில் பட்டது என்று கருதிய விராட்கோலி மைதான நடுவர் நிஜெல் லாங்கின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்தார். ஆனால் அந்த அப்பீல் தோல்வியிலேயே முடிந்தது.
விராட்கோலியின் அவுட் அப்பீலை நீண்ட நேரம் ஆய்வு செய்த 3வது நடுவர் ரிச்சர்ட் பந்து முதலில் பேட்டில் பட்டதா? அல்லது பேடில் பட்டதா? என்பதற்கு தெளிவான ஆதாரம் இல்லாததால் மைதான நடுவரின் முடிவே சரியானது என்று அறிவித்தார். முதல் இன்னிங்சில் 12 ரன்னில் ஆட்டம் இழந்த விராட்கோலி இந்த இன்னிங்சிலும் விரைவில் ஆட்டம் இழந்ததால் விரக்தியுடன் வெளியேறினார். முன்கூட்டியே களம் இறக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா (2 ரன்) வந்த வேகத்திலேயே ஹேசில்வுட் பந்து வீச்சில் போல்டு ஆகி பெவிலியன் திரும்பினார்.
இதனை அடுத்து ரஹானே, புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார். தேனீர் இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து இருந்தது. 4 ரன்னில் இருக்கையில் நாதன் லயன் பந்து வீச்சில் கேப்டன் ஸ்டீவன் சுமித்தின் கேட்ச்சில் இருந்து தப்பி பிழைத்த புஜாரா அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி பொறுப்புடன் ஆடி அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். புஜாரா 125 பந்துகளில் 3 பவுண்டரியுடன் அரை சதத்தை கடந்தார். அவருக்கு ரஹானே பக்கபலமாக நின்று விளையாடினார். இருவரும் நிதானமாக ஆடி அணியை முன்னிலை பெற வைத்தனர்.
நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 72 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. புஜாரா 173 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 79 ரன்னும், ரஹானே 105 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 40 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) 4வது நாள் ஆட்டம் நடக்கிறது. இந்திய அணி 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கைவசம் 6 விக்கெட்டுகள் உள்ளது. இதனால் இந்த ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது.
இந்தியா 189
ஆஸ்திரேலியா
வார்னர் (பி) அஸ்வின் 33
ரென்ஷா (ஸ்டம்பிங்) சஹா (பி) ஜடேஜா 60
ஸ்டீவன் சுமித் (சி) சஹா (பி) ஜடேஜா 8
ஷான் மார்ஷ் (சி) நாயர் (பி) உமேஷ் 66
ஹேன்ட்ஸ்கோம்ப் (சி) அஸ்வின் (பி) ஜடேஜா 16
மிட்செல் மார்ஷ் எல்.பி.டபிள்யூ (பி) இஷாந்த் 0
மேத்யூ வேட் எல்.பி.டபிள்யூ, (பி) ஜடேஜா 40
மிட்செல் ஸ்டார்க் (சி) ஜடேஜா (பி) அஸ்வின் 26
ஸ்டீவ் ஓ கீபே (நாட்அவுட்) 4
நாதன் லயன் எல்.பி.டபிள்யூ. (பி) ஜடேஜா 0
ஹேசில்வுட் (சி) லோகேஷ் ராகுல் (பி) ஜடேஜா 1
எக்ஸ்டிரா 22
மொத்தம் (122.4 ஓவர்களில் ஆல்அவுட்) 276
152, 282, 3134, 4160, 5163, 6220, 7269, 8274, 9274.
இஷாந்த் ஷர்மா 278481
உமேஷ் யாதவ் 247571
அஸ்வின் 4913842
ஜடேஜா 21.41636
கருண் நாயர் 1070
இந்தியா
லோகேஷ் ராகுல் (சி) சுமித் (பி) ஓ கீபே 51
அபினவ் முகுந்த் (பி) ஹேசில்வுட் 16
புஜாரா (நாட்அவுட்) 79
விராட்கோலி எல்.பி.டபிள்யூ (பி) ஹேசில்வுட் 15
ரவீந்திர ஜடேஜா (பி) ஹேசில்வுட் 2
ரஹானே (நாட்அவுட்) 40
எக்ஸ்டிரா 10
மொத்தம் (72 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு) 213
: 139, 284, 3112, 4120.
மிட்செல் ஸ்டார்க் 100450
ஹேசில்வுட் 160573
நாதன் லயன் 272690
ஸ்டீவ் ஓ கீபே 163281
மிட்செல் மார்ஷ் 3040