பெங்களூரு,
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூரு - லக்னோ அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது.
213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி ஸ்டாய்னிஸ் , நிகோலஸ் பூரானின் அதிரடியால் கடைசி பந்தில் வெற்றிபெற்றது.
கடைசி ஓவரில் லக்னோவின் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்டது. கைவசம் 3 விக்கெட் இருந்தது. பரபரப்பான 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் வீசினார். இதில் முதல் 5 பந்துகளில் 4 ரன் எடுத்த லக்னோ அணி மார்க்வுட் (1 ரன்), ஜெய்தேவ் உனட்கட் (9 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளையும் தாரைவார்த்தது. இதனால் கடைசி பந்தில் ஒரு ரன் தேவையாக இருந்தது. கடைசி பந்தை சந்தித்த அவேஷ்கான் பந்தை அடிக்க தவறினாலும் வேகமாக ஓடி ஒரு ரன் எடுத்து விட்டார்.
விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கொஞ்சம் தடுமாறி விட்டார். இல்லாவிட்டால் ரன்-அவுட் செய்து சமனில் முடித்திருக்கலாம். ஆனால் அதற்குள் லக்னோ ஒரு ரன் எடுத்து விட்டது.
தொடர்ந்து வெற்றி பெற்ற உற்சாகத்தில் ஹெல்மெட்டை தூக்கி அவேஷ் கான் கீழே வீசினார் . இந்த நிலையில் லக்னோ அணி வீரர் அவேஷ் கான் நடத்தை விதிகளை மீறியதற்காக ஐபிஎல் நிர்வாகத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளார் .