கொழும்பு,
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 2 போட்டிகள் முடிவில் 2 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்தது. இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக பக்கார் ஜமான், இமாம் உல் ஹக் ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் பக்கார் 27 ரன், இமாம் 13 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து பாபர் ஆசம் மற்றும் முகமது ரிஸ்வான் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்தனர். அரைசதம் அடித்த நிலையில் பாபர் ஆசம் 60 ரன்னிலும், ரிஸ்வான் 67 ரன்னிலும் அடுத்து களம் இறங்கிய சாத் சகீல் 9 ரன், ஷதாப் கான் 3 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இதையடுத்து முகமது நவாஸ் மற்றும் ஆகா சல்மான் ஜோடி சேர்ந்தனர். இதில் நவாஸ் 30 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார், இறுதியில் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி ஆட உள்ளது.