கிரிக்கெட்

ஸ்மார்ட் சன்கிளாஸ் பயன்படுத்த தடை - மீறினால் அபராதம்... பிசிசிஐ அதிரடி

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் ஸ்மார்ட் சன்கிளாஸ்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் சூதாட்டம் மற்றும் முறைகேடு தொடர்பான அச்சுறுத்தல்களை தடுக்க, பிசிசிஐ-ன் ஊழல் தடுப்புப் பிரிவு (ACU) புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் ஸ்மார்ட் சன்கிளாஸ்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏன் இந்த தடை?

ஸ்மார்ட் சன்கிளாஸ்களில் இணைய இணைப்பு, வீடியோ காலிங், ஆடியோ மற்றும் வீடியோ பதிவு உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இத்தகைய தொழில்நுட்ப வசதிகள் ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீற பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் பிசிசிஐக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், போட்டிகளின் நேர்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

விதிமுறையை மீறினால் என்ன?

பிசிசிஐயின் புதிய உத்தரவின்படி, போட்டி தொடர்புடையவர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் கண்ணாடிகளை ஒப்படைக்க தவறினாலோ அல்லது விதிமுறையை மீறினாலோ, ஐபிஎல் 2026 ஒழுங்குமுறை விதிகளின் கீழ் அபராதங்கள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம்

இதற்கு முன்பு, டக்அவுட் பகுதியில் மொபைல் போன் பயன்படுத்தியதற்காக ராஜஸ்தான் அணியின் மேலாளர் ரோமி பிந்தர்க்கு பிசிசிஐ ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருந்தது.

SCROLL FOR NEXT