துபாய்,
தென் ஆப்பிரிக்கா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் கடந்த 8-ந் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 332 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த போட்டியில் ஐசிசி-யின் விதிகளை மீறியதாக கூறி வங்காளதேச பந்துவீச்சாளர் கலீத் அகமதிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் இரண்டாம் நாளில் தென்னாப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸின் 95வது ஓவரில் அந்த அணியின் வெர்ரைன் பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். அப்போது கலீத் அகமத் வீசிய பந்து வெர்ரைன் அடித்த வேகத்தில் மீண்டும் கலீத் அகமத் கைக்கு சென்றது. அப்போது பந்தைபிடித்த அவர் மீண்டும் அதனை ஸ்டம்ப்பை நோக்கி எறிவது போல் வெர்ரைன் கை மீது எறிந்தார்.
இந்த நிலையில் தற்போது ஐசிசி இந்த சம்பவத்திற்கு லெவல் 1 விதி மீறல் பதிவு செய்து அகமதிற்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதித்துள்ளது.
பொருத்தமற்ற மற்றும் ஆபத்தான முறையில் பேட்ஸ்மேனை நோக்கி பந்தை எறிந்ததால் இந்த நடவடிக்கை என ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.