டாக்கா,
வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளி கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது.
இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி சிட்டகாங்கில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் அந்த அணியின் கிளார்க், டெனி கிளவர் அதிகபட்சமாக தலா 51 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேசம் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய தவ்ஹித் 51 ரன்களும், ஷமிம் 31 ரன்களும் குவித்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற புள்ளிக்கணக்கில் வங்காளதேசம் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது.