மும்பை,
2023-ம் ஆண்டுவாக்கில் இந்திய டி20 அணியின் முக்கியமான வீரராக இருந்தவர் விக்கெட் கீப்பர் பேட்டரான இஷான் கிஷன். ஆனால், 2024 பிப்ரவரியில் திடீரென பிசிசிஐ-யின் வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலில் இருந்து காணாமல் போனார் இஷான். காரணம், அப்போது பிசிசிஐ செயலாளராக இருந்த ஜெய் ஷா, வீரர்களுக்கு அனுப்பிய ஒரு கடிதம் தான் என்று சொல்லப்பட்டது. அந்தக் கடிதத்தில், உள்ளூர் கிரிக்கெட் தொடர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி வலியுறுத்தியிருந்தார் ஜெய் ஷா. உள்ளூர் தொடர்களைப் புறந்தள்ளிவிட்டு பெரும்பாலான வீரர்கள் பணம் கொழிக்கும் ஐபிஎல் தொடருக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக எழுந்த புகாரை அடுத்தே இந்தக் கடிதம் பிசிசிஐ தரப்பில் இருந்து முன்னணி வீரர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது.
அப்போது, திடீரென பிசிசிஐ-யிடம் இஷான் கிஷன் ஒரு கோரிக்கை வைத்தார். சொந்தக் காரணங்களுக்காக கிரிக்கெட்டில் இருந்து ஒரு சிறிய இடைவெளி எடுத்துக் கொள்வதாக இஷான் அப்போது குறிப்பிட்டிருந்தார். ஆனால், இஷான் கிஷானின் இந்தக் கோரிக்கைக்கு பிசிசிஐ தரப்பில் இருந்து கடுமையான எதிர்வினை வந்தது. குறிப்பாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாத சமயத்தில், உள்ளூர் தொடர்களில் பங்கேற்காமல், இஷான் கிஷன் ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் இருந்தார். இதுவும் பிசிசிஐ தரப்பில் கடும் எதிர்ப்பை சம்பாதித்தது. விளைவு, வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலில் இருந்து இஷான் கிஷனை 2024 பிப்ரவரியில் நீக்கியது பிசிசிஐ.தொடர்ந்து அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை. இதனை தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி மீண்டும் இந்திய டி20 அணியில் இடம் பிடித்தார். தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார்.
இந்த நிலையில், பிசிசிஐ-யின் 2025-26 ஆம் ஆண்டிற்கான ஒப்பந்தப் பட்டியலில் இஷான் கிஷன் மீண்டும் இடம் பெறவில்லை. இந்திய அணியில் விளையாடி வரும் நிலவையிலும் இஷான் கிஷன் ஒப்பந்தப் பட்டியலில் இடம் பெறாதது விவாத பொருளாக மாறியுள்ளது.