கிரிக்கெட்

மும்பையை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு வெற்றி

பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.

ராய்ப்பூர்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை எதிர்த்து விளையாடியது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. மும்பை அணியில் திலக் வர்மா, நமன் திர் இருவரும் சிறப்பாக விளையாடினர். திலக் வர்மா அரைசதம் அடித்து 57 ரன்களும், நமன் திர் 47 ரன்களும் எடுத்தனர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியில் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து பெங்களூரு அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேக்கப் பெத்தேல் 27 ரன்களிலும், கோலி ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அதிக அளவாக குருணல் பாண்ட்யா அரை சதம் (73 ரன்கள்) விளாசினார். ஜித்தேஷ் சர்மா 18, தேவ்தத் பதிக்கல் 12 ரன்கள் எடுத்தனர். ஷெப்பர்டு 4 ரன்களில் வெளியேறினார்.

புவனேஸ்வர் குமார் 7 ரன்களும், ரஷீக் சலாம் தர் 3 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் கார்பின் 4 விக்கெட்டுகள், தீபக் சஹார் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். முடிவில், மும்பையை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.