சென்னை,
பெண்கள் பிரீமியர் லீக் (WPL) இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியின் சாம்பியன் கனவு இந்த முறையும் நொறுங்கியது. ஜெமிமா ரொட்ரிக்ஸ் தலைமையிலான டெல்லி அணி, இறுதிப் போட்டியில் தொடர்ந்து நான்காவது முறையாக தோல்வியடைந்துள்ளது.
முதல் இன்னிங்ஸில் டெல்லி அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. இது டபிள்யூ.பி.எல் இறுதிப் போட்டிகளில் இதுவரை பதிவான மிக அதிகமான ஸ்கோராகும்.
ஆனால், இந்த கடினமான இலக்கையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி துரத்தி வெற்றி பெற்றது. பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தானா 41 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார். அவருடன் ஜார்ஜியா வோல் 54 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்தார்.
இரண்டாவது விக்கெட்டுக்காக இந்த இருவரும் 92 பந்துகளில் 165 ரன்கள் சேர்த்தனர். இது பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த பார்ட்னர்ஷிப் ஆகும். இந்த அபாரமான பார்ட்னர்ஷிப் பெங்களூரு வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி, டபிள்யூ.பி.எல் வரலாற்றிலேயே மிக உயர்ந்த ரன் சேஸை பதிவு செய்ததுடன், இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது. மேலும், ஒரே நேரத்தில் ஐபிஎல் மற்றும் டபிள்யூ.பி.எல் கோப்பைகளை வைத்திருக்கும் முதல் அணியாக பெங்களூரு புதிய சாதனையை படைத்துள்ளது. தற்போது ஐபிஎல் கோப்பையும் பெங்களூரு அணியிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.