ஆட்டத்தின் 14-வது ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் லாஹிரு குமாரா வீசிய பந்தை இந்திய வீரர் ஷிகர் தவான் (31 ரன்னில்) அடித்து ஆடிய போது அது பேட்டில் உரசிக்கொண்டு பின்பகுதிக்கு சீறியது. 2-வது ஸ்லிப்பில் நின்ற குணரத்னே பாய்ந்து பந்தை பிடிக்க முயன்ற போது, பந்து அவரது கையில் பட்டு தெறித்தது. பந்து தாக்கியதில் வலியால் துடித்த அவர் உடனடியாக வெளியேறினார். பிறகு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஸ்கேன் பரிசோதனை எடுத்து பார்க்கப்பட்ட போது, அவரது இடது கை பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதனால் அவர் இந்த டெஸ்டில் மட்டுமல்ல, எஞ்சிய டெஸ்ட் தொடர் மற்றும் ஒரு நாள் தொடரிலும் விளையாட முடியாது. அவருக்கு விரைவில் ஆபரேஷன் செய்யப்பட இருப்பதாகவும், காயம் குணமடைய 6 வாரங்கள் ஆகும் என்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் மருத்துவ குழு உறுப்பினர் அர்ஜூன் டி சில்வா தெரிவித்தார். குணரத்னே இல்லாதது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை.