கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: தொடரை கைப்பற்றுமா இந்திய அணி? 2-வது 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது

இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் 2-வது 20 ஓவர் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது.

தினத்தந்தி

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி சிட்னி நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி வியூகங்களை தீட்டியுள்ளது.

ஒரு நாள் தொடரில் முதல் 2 ஆட்டங்களில் பந்து வீச்சில் சொதப்பிய இந்திய அணி தமிழக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜனின் வருகைக்கு பிறகு புத்துணர்ச்சி அடைந்துள்ளது. கடைசி ஒரு நாள் போட்டியில் 2 விக்கெட் வீழ்த்திய நடராஜன், முதலாவது 20 ஓவர் போட்டியில் 3 விக்கெட்டுகளை சாய்த்து வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

துல்லியமாக யார்க்கர் போடுவதில் கைதேர்ந்த வீரராக உருவெடுத்து வரும் நடராஜன் இன்றைய ஆட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவாரா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். இதே போல் மற்றொரு தமிழக சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிக்கனத்தை காட்டினார். இதில் 13 பந்தில் ரன்னே எடுக்கப்படவில்லை. சிட்னியிலும் அவர் முத்திரை பதிக்க வாய்ப்புள்ளது.

முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஹெல்மெட்டில் பவுன்சர் பந்து பலமாக பதம் பார்த்தது. அதன் பாதிப்பை தலையில் உணர்ந்ததால் அவருக்கு பதிலாக புதிய விதிமுறைப்படி மாற்று வீரராக சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் களம் இறங்கி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகனாக ஜொலித்தார். அவரது சேர்ப்பு குறித்து ஆஸ்திரேலிய வீரர்கள் கேள்வி எழுப்பினர்.

தலையில் பாதிப்பு ஏற்பட்டால் மாற்று வீரரை அனுமதிக்கும் விதிமுறைப்படி காயமடைந்த வீரர் எத்தகைய தன்மை உடையவரோ அதே போன்ற வீரரைத் தான் சேர்க்க வேண்டும். ஜடேஜா ஒரு ஆல்-ரவுண்டர், ஆனால் யுஸ்வேந்திர சாஹல் முழுமையான ஒரு பவுலர். இதை எப்படி போட்டி நடுவர் அனுமதித்தார் என்றும் சர்ச்சையை கிளப்பினார்கள். இருப்பினும் அத்துடன் இந்த பிரச்சினை ஓய்ந்தது. பந்து தாக்கிய பாதிப்பில் இருந்து ஜடேஜா இன்னும் மீளாததால் எஞ்சிய 20 ஓவர் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்றும், தேவைப்பட்டால் ஸ்கேன் எடுத்து பார்க்கப்படும் என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக அணியில் கூடுதலாக ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதலாவது ஆட்டத்தில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுலும், ரவீந்தி ஜடேஜாவும் மட்டும் சோபித்தனர். அதுவும் ஜடேஜா (23 பந்தில் 44 ரன்) காட்டிய அதிரடியால் தான் அணி 161 ரன்களை எட்ட முடிந்தது. ஜடேஜாவின் விலகல் பின்னடைவு தான். கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவான், மனிஷ் பாண்டே தொடக்க ஆட்டத்தில் ஏமாற்றம் அளித்தனர். இன்றைய ஆட்டத்தில் இவர்கள் அசத்தினால் வலுவான ஸ்கோரை எட்டலாம்.

இந்த ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் ஆஸ்திரேலிய வீரர்கள் கடுமையாக போராடுவார்கள். முதல் ஆட்டத்தில் தொடக்க வீரர்கள் கேப்டன் ஆரோன் பிஞ்சும், டார்சி ஷார்ட்டும் அருமையான தொடக்கம் தந்த போதிலும் மிடில் வரிசை வீரர்கள் தாக்குப்பிடிக்கவில்லை. குறிப்பாக ஸ்டீவன் சுமித்தும், மேக்ஸ்வெல்லும் அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேறியதால் இலக்கை அடையவில்லை.

முந்தைய ஆட்டத்தில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய வீரர்கள் மல்லுகட்டுவார்கள் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. கான்பெர்ரா ஆட்டத்தில் ஆரோன் பிஞ்ச் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டார். ஒருவேளை அவர் உடல்தகுதி பெறாவிட்டால் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் அணியை வழிநடத்துவார்.

சிட்னி மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானது. இங்கு நடந்த முதல் இரு ஒரு நாள்போட்டிகளில் இரு அணியினரும் 300 ரன்களுக்கு மேல் குவித்து ரன்மழை பொழிந்ததை பார்க்க முடிந்தது. சுழலும் ஓரளவு எடுபடும்.

இந்த மைதானத்தில் இதுவரை ஏழு 20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. இவற்றில் 4-ல் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. இரு ஆட்டங்களில் தோற்று இருக்கிறது. இரு தோல்விகளும் இந்தியாவுக்கு எதிராக (2016 மற்றும் 2018-ம் ஆண்டு) நிகழ்ந்தவை ஆகும். 2007-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 221 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். இந்திய அணி 2016-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 200 ரன் எடுத்து சேசிங் செய்ததும் கவனிக்கத்தக்கது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), சஞ்சு சாம்சன், மனிஷ் பாண்டே அல்லது ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், முகமது ஷமி அல்லது பும்ரா, தீபக் சாஹர், டி.நடராஜன்.

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டார்சி ஷார்ட், ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், மேத்யூ வேட், ஹென்ரிக்ஸ், சீன் அப்போட், ஆடம் ஜம்பா, ஸ்வெப்சன் அல்லது நாதன் லயன், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட்.

இந்திய நேரப்படி பிற்பகல் 1.40 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி டென்1 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு