கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது

இந்தியா– நியூசிலாந்து அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கான்பூரில் இன்று நடக்கிறது.

கான்பூர்,

இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கான்பூரில் இன்று நடக்கிறது. இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. மும்பையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்தும், புனேயில் நடந்த 2வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் இந்த தொடர் 11 என்ற கணக்கில் சமனில் இருக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன்பார்க் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இங்கு பகல்இரவாக நடைபெறும் முதல் ஒரு நாள் போட்டி இதுவாகும்.

தொடக்க ஆட்டத்தில் 280 ரன்கள் குவித்தும் தோல்வியை தழுவிய இந்திய அணி, புனே ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர்குமாரும், ஜஸ்பிரித் பும்ராவும் 230 ரன்களுக்குள் எதிரணியை கட்டுப்படுத்த உதவியதால் 2வது ஆட்டத்தின் வெற்றி எளிதானது. அதே உத்வேகத்துடன் கடைசி ஆட்டத்திலும் நியூசிலாந்தை அடக்குவதற்கு இந்திய வீரர்கள் தங்களை தயார்படுத்தி வருகிறார்கள்.

தொடர்ச்சியாக 6 ஒரு நாள் தொடர்களை வசப்படுத்தியுள்ள இந்திய அணி, அந்த கம்பீர பயணத்தை நீட்டிப்பதில் ஆர்வமாக உள்ளது. முந்தைய ஆட்டத்தில் ஷிகர் தவானும், தினேஷ் கார்த்திக்கும் அரைசதம் விளாசினர். தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவும் நல்ல நிலைக்கு வந்தால், இந்திய அணி மேலும் வலுப்பெறும். இன்றைய ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி 83 ரன்கள் எடுத்தால், ஒரு நாள் போட்டியில் 9 ஆயிரம் ரன்களை கடந்த 6வது இந்தியர் என்ற சிறப்பை பெறுவார்.

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை தொடக்க ஆட்டத்தில் இந்திய பந்து வீச்சை சாதுர்யமாக சமாளித்து அசத்தினர். விக்கெட் கீப்பர் டாம் லாதம் செஞ்சுரி போட்டார். ஆனால் 2வது ஆட்டத்தில் அவர்களின் வியூகங்களை நமது பவுலர்கள் தூள்தூளாக்கி விட்டனர். தவறுகளை திருத்திக்கொண்டு இந்த முறை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் முனைப்புடன் உள்ளனர். இதில் வெற்றி பெற்றால் இந்திய மண்ணில் முதல்முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்றி நியூசிலாந்து அணி வரலாறு படைக்கும்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், இந்த ஆட்டத்தில் நெருக்கடியை திறம்பட கையாள்வது மிகவும் முக்கியமாகும். புனே ஆட்டத்தை போன்று இதிலும் விளையாட முயற்சிப்போம். ஸ்விங்கை இழக்காமல் வேகமாக பந்து வீசுவதில் நிறைய முன்னேற்றம் கண்டிருக்கிறேன். அந்த வகையில் மிகவும் மகிழ்ச்சி. இதே போல் எனது பேட்டிங்கிலும் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. என்றார்.

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி கூறுகையில், எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் பரவசத்தில் இருக்கிறோம். ஒரு நாள் கிடைத்த ஓய்வில் புத்துணர்ச்சி பெற்றுள்ளோம். இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்பது கடினம் என்பதை அறிவோம். ஆனால் தொடரை வென்றால் இனிமையான அனுபவமாக இருக்கும் என்றார்.

இந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை 13 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 9ல் வெற்றியும், 4ல் தோல்வியும் கண்டுள்ளது. கடைசியாக இங்கு 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 303 ரன்கள் குவித்ததும், அதை நெருங்கி வந்து இந்திய அணி 5 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததும் நினைவு கூரத்தக்கது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), தினேஷ் கார்த்திக், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல் அல்லது குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ, கனே வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம், ஹென்றி நிகோல்ஸ், காலின் டி கிரான்ட்ஹோம், மிட்செல் சான்ட்னெர், டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, ஆடம் மில்னே.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.