சென்னை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடக்கிறது. தினமும் சாலை மறியல், ரெயில் மறியல் போன்ற போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்தநிலையில், சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். போட்டி நடத்தினால் போராட்டம் நடத்துவோம் என்று பல்வேறு அமைப்புகள் அறிவித்தன. இதன்படி, பிற்பகல் ஆனதும், அணி அணியாக பல்வேறு அமைப்புகளைச்சேர்ந்தவர்கள் அண்ணா சாலையில் திரண்டனர்.
இதனால், சென்னை அண்ணா சாலை ஸ்தம்பித்தது. போராட்டக்குழு முற்றுகையிடலாம் என சென்னை சேப்பாக்கம் முழுதும் அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பலத்த பாதுகாப்புடன் ஆழ்வார்பேட்டை நட்சத்திர ஓட்டலில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மைதானத்திற்கு வந்து சேர்ந்தனர். போட்டியைக்காண ரசிகர்களும் மைதானத்திற்கு வர துவங்கியுள்ளனர்.