மொகாலி,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன்படி இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் மார்ச் 4ந்தேதி முதல் 8ந்தேதி வரை நடைபெறுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் இந்த போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கிய பிறகு ரோகித் சர்மா மூன்று வடிவிலான போட்டிக்கும் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்தியா அடியெடுத்து வைக்கும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் நேற்று முதல் நாள் ஆட்டத்தில் களமிறங்கினர்.
ரோகித் (29), மயங்க் அகர்வால் (33) ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். முதல் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 26 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை சேர்த்திருந்தது. ஹனுமா விகாரியும்(30), விராட் கோலியும்(15) களத்தில் இருந்தனர்.
இந்த போட்டியில் தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் விராட் கோலி 45 (75 பந்துகள் 5 பவுண்டரிகள்) எடுத்து வெளியேறினார். அவர், 38.2வது ஓவரில் பெர்னாண்டோ வீசிய பந்தில் ஒரு ரன் எடுத்தபோது, டெஸ்ட் போட்டியில் 8 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை படைத்த 6வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இந்திய அணி தேநீர் இடைவேளை வரை 53 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை எடுத்திருந்தது. ஸ்ரேயாஸ் 14, ரிஷாப் பண்ட் 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதன்பின் 27 ரன்கள் எடுத்திருந்த ஸ்ரேயாஸ், டி சில்வா பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேறினார். தொடர்ந்து ரிஷாப்புடன் ரவீந்திர ஜடேஜா கைகோர்த்து விளையாடினார். இந்த போட்டியில், ரிஷாப் அதிரடியாக விளையாடி அரை சதம் எடுத்துள்ளார். இந்த நிலையில், ரிஷாப் பண்ட் 4 ரன்களில் சதம் தவற விட்டார். அவர் 96 ரன்கள் (97 பந்துகள் 9 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) எடுத்திருந்தபோது, லக்மல் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஜடேஜா 45, அஸ்வின் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில், 85 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்து இருந்தது.
இதனை தொடர்ந்து இன்று 2வது நாள் ஆட்டம் தொடர்ந்தது. இன்றைய 2வது நாள் ஆட்டத்தில் அஸ்வின் 61 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். ஜெயந்த் 2 ரன்களில் வெளியேறி உள்ளார். ஜடேஜா 175 (228 பந்துகள் 17 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்), முகமது சமி 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 129.2 ஓவர்களில் இன்றைய ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இதனை தொடர்ந்து தேநீர் இடைவேளை விடப்பட்டது.
இதனை தொடர்ந்து இலங்கை அணி பேட்டிங் செய்தது. இதில், தொடக்க ஆட்டக்காரர்களான கருணாரத்னே (28), திரிமன்னே (17) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். நிசான்கா (26) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். மேத்யூஸ் (22), டிசில்வா (1) ரன்களில் வெளியேறினர். அசலன்கா (1) ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இலங்கை அணி ஆட்ட நேர முடிவில், 43 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்துள்ளது. இதனால், இலங்கை அணி இந்தியாவை விட 466 ரன்கள் பின்தங்கி உள்ளது.