மும்பை,
கொரோனா அச்சுறுத்தலால் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் இடையிலான லீக் ஆட்டம் புனேயில் நாளை இரவு திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், போட்டி நடைபெறும் இடம் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, டெல்லி - பஞ்சாப் அணிகள் இடையேயான போட்டி புனேவுக்கு பதிலாக மும்பையில் நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
டெல்லி அணிக்குள் ஊடுருவிய கொரோனா
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்றுள்ள 10 அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உடல்தகுதி நிபுணர் பேட்ரிக் பர்ஹர்ட் கடந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த சீசனில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதல் கொரோனா பாதிப்பு இது தான்.
இந்த நிலையில் அந்த அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்சுக்கு (ஆஸ்திரேலியா) லேசான காய்ச்சலுடன் அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து துரிதமாக முடிவு கிடைக்கும் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா இருப்பதற்கான பாசிட்டிவ் முடிவு வந்தது.
இதன் எதிரொலியாக நேற்று புனேக்கு செல்ல இருந்த டெல்லி வீரர்களின் பயணம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. தனிமைப்படுத்தும் விதமாக வீரர்கள் அனைவரையும் ஓட்டல் அறையிலேயே தொடர்ந்து இருக்கும்படி ஐ.பி.எல். நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால் வீரர்கள் அறையிலேயே முடங்கினர்.
இதையடுத்து மார்ஷ் உள்பட டெல்லி அணியினர் அனைவருக்கும் ஆர்.டி.-பி.சி.ஆர். முறையில் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு நேற்று மாலையில் வெளியானது. இதில் முதல்சோதனையில் மிட்செல் மார்சுக்கு பாதிப்பு இல்லை என்பதற்கான நெகட்டிவ் வந்தது. ஆனால் 2-வது கட்ட சோதனையில் அவருக்கு பாதிப்பு இருப்பது மீண்டும் உறுதியானது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை தங்களது மருத்துவ குழு உன்னிப்பாக கண்காணித்து வருவதாக டெல்லி அணி நிர்வாகம் தரப்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் குறைந்தது 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டியது வரும்.
மார்ஷ், நடப்பு தொடரில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது. அணியின் டாக்டர் அபிஜித் சால்வி மற்றும் இன்னொரு உதவியாளருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஆக, டெல்லி முகாமில் கொரோனா பாதிப்பு 4-ஆக உயர்ந்துள்ளது. மற்ற வீரர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை.