லண்டன்,
இங்கிலாந்தில் நடந்து வரும் மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாப்8 அணிகள் பங்கேற்றுள்ளன.
இதில் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும், பி பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில் லண்டனில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் ஆசிய அணிகளான இந்தியாவும், இலங்கையும் மோதுகின்றன. இப்போட்டியில்
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் களம் இறங்கினர். இந்த ஜோடி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தது. இதனால் முதல் ஐந்து ஓவர்களில் இந்திய அணியின் ரன்ரேட் ஆமைவேகத்தில் சென்றது. முதல் 5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி வெறும் 17 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
பிட்சின் தன்மையை ஓரளவு கணித்த பின்னர் ரோகித் சர்மாவும் தவானும் படிப்படியாக ரன்வேகத்தை அதிகப்படுத்தினர். சிறப்பான ஆட்டத்தை இந்த ஜோடி வெளிப்படுத்தியது. 19.2 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை கடந்தது. அபாராமாக ஆடி வந்த ரோகித் சர்மா-ஷிகர் தவான் கூட்டணி 24.5 ஓவர்களில் 138 ரன்கள் எடுத்து இருந்த போது பிரிந்தது. ரோகித் சர்மா 78 ரன்களில் மலிங்கா பந்தில் ஆட்டமிழந்தார். 79 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் இந்த 78 ரன்களை ரோகித் சர்மா சேர்த்தார்.
இதன்பின் வந்த விராட் கோலி ரன் எதுவும் இன்றி அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். யுவராஜ் 7 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் ஒருமுனையில் ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். தோனியுடன் கைகோர்த்த ஷிகர் தவான் சதம் அடித்து கலக்கினார். 112 பந்துகளில் 12 பவுண்டரியுடன் ஷிகர் தவான் சதத்தை எட்டினார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஷிகர் தவான் அடிக்கும் 10 வது சதம் இதுவாகும்.