தரம்சாலா,
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 01 என்ற கணக்கில் பறிகொடுத்த இலங்கை அணி அடுத்ததாக மூன்று ஒரு நாள் போட்டிகளிலும், மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா இலங்கை மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்துகிறார். சர்வதேச போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாக பணியாற்ற இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இலங்கை வீரர்களை பொறுத்தவரை இப்போது தான் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.
காற்று மாசுபாடு காணப்படும் டெல்லியை விட்டு வெளியேறியது மற்றும் விராட் கோலி இந்த தொடரில் மேலும் பல சாதனைகள் படைக்க வாய்ப்பில்லை என்பவை இலங்கை வீரர்களை பொறுத்தவரை நிம்மதி பெருமூச்சு விடும் சம்பவமாக பார்க்கப்பட்டது.
இன்றையை போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்து விளையாடியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் வந்த வேகத்தில் அவுட் ஆகி நடையை கட்டியது இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது, இலங்கை அணிதானே என்ற நினைத்தாலும் அதற்கு அடுத்தாலும் விக்கெட் பறிபோனது ரசிகர்களை பெரும் சோகத்திற்கு உள்ளாகியது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி மட்டும் கடைசி வரையில் போராடினார். இந்திய அணி 38.2 ஓவர்களின் அனைத்து விக்கெட்களையும் இழந்து 112 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகப்பட்சமாக டோனி 65 ரன்களை அடித்தார். இலங்கை அணிக்கு 113 ரன் கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இல்லாத நிலையில் அணி பரிதாப நிலையை அடைந்த போது ரசிகர்கள் டுவிட்டரில் தங்களில் ஆதங்கத்தை பதிவு செய்தார்கள். விராட் கோலி உடனடியாக இந்தியாவிற்கு வரவேண்டும் என்றெல்லாம் அழைப்பு விடுத்தார்கள். விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா திருமணம் இத்தாலியில் நடைபெறுகிறது. இந்நிலையில் விராட் கோலி திருமணத்தை நிறுத்திவிட்டு இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாட வரவேண்டும் என்றெல்லாம் நெட்டிசன்கள் தங்களுடைய விருப்பங்களை தெரிவித்து வருகிறார்கள்.