கிரிக்கெட்

டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் முதல் சிக்ஸர்... ஒரே நாட்டின் வீரர்கள் படைத்த அரிய உலக சாதனை

கிரிக்கெட் வரலாற்றில் அடிக்கப்பட்ட முதல் சிக்ஸர் மறக்க முடியாத வரலாற்று நிகழ்வாக கருதப்படுகிறது.

சென்னை,

கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் முதல் சிக்ஸரை அடித்த பெருமை ஆஸ்திரேலிய வீரர்களுக்கே சொந்தம்.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20

கிரிக்கெட்டில் ஒரு வீரரின் முதல் ரன், முதல் விக்கெட் போன்றவை எப்போதும் சிறப்பு வாய்ந்தவை. அதேபோல், கிரிக்கெட் வரலாற்றில் அடிக்கப்பட்ட முதல் சிக்ஸரும் மறக்க முடியாத வரலாற்று நிகழ்வாக கருதப்படுகிறது. அந்தவகையில், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவங்களிலும் முதல் சிக்ஸரை அடித்த வீரர்கள் யார் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் சிக்ஸர்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் 1877-ல் தொடங்கப்பட்டாலும், முதல் சிக்ஸர் அடிக்கப்பட 21 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. 1898-ம் ஆண்டு அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஜோ டார்லிங் இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்தினார். அந்த காலத்தில் பந்து பவுண்டரி லைனை தாண்டினால் 5 ரன்கள் மட்டுமே வழங்கப்பட்டன. மைதானத்தை தாண்டி வெளியே சென்றால் மட்டுமே 6 ரன்கள் வழங்கப்பட்டது. அந்த போட்டியில் ஜோ டார்லிங் மொத்தம் 3 சிக்ஸர்கள் விளாசியதுடன் சதமும் அடித்து, ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

ஒருநாள் கிரிக்கெட்டின் முதல் சிக்ஸர்

1971-ம் ஆண்டு ஜனவரி 5-ந் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியிலேயே வரலாற்றின் முதல் சிக்ஸர் பதிவானது. இங்கிலாந்துக்கு எதிராக நடந்த அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் இயன் சேப்பல் முதல் சிக்ஸரை அடித்து வரலாறு படைத்தார்.

டி20 கிரிக்கெட்டின் முதல் சிக்ஸர்

2005-ம் ஆண்டு ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் சர்வதேச டி20 போட்டியில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் முதல் சிக்ஸரை விளாசினார்.

இதன் மூலம் கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் முதல் சிக்ஸரை அடித்த பெருமை ஆஸ்திரேலிய வீரர்களுக்கே சொந்தமாகியுள்ளது.