திருவனந்தபுரம்,
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளி கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3 போட்டிகளில் இந்தியாவும், 1 போட்டியில் நியூசிலாந்தும் வென்றது.இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது .
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா , சஞ்சு சாம்சன் களமிறங்கினர். தொடக்கத்தில் சாம்சன் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா 30 ரன்களில் வெளியேறினார்.பின்னர் இஷான் கிஷான் , சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடினர். பந்துகளை பவுண்டரி, சிக்ஸருக்கு பறக்க விட்டனர். பொறுப்புடன் ஆடிய இருவரும் அரைசதமடித்து அசத்தினர். சூர்யகுமார் யாதவ் 63 ரன்களில் வெளியேறினார். மறுபுறம் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த இஷான் சதமடித்து அசத்தினார். பின்னர் ஹர்திக் பாண்டியா சிக்ஸர்களை பறக்க விட்டார். அவர் 42 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 19.4 ஓவர்களில் 225 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.இந்த நிலையில், அதிரடியாக ஆடி சதமடித்து இஷான் கிஷனுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
இதன்பின்பு பேசிய இஷான் கிஷன், "சொந்த மைல்கல் சாதனைகளை விட, அணியின் வெற்றியே முக்கியம்; நீங்கள் ஒரு சாதனையை நெருங்கியிருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல. விளையாடும்போது சிக்சருக்கு அடிக்கக்கூடிய பந்தாக இருந்தால் அடித்துவிட வேண்டும், அப்போது சொந்த சாதனைக்காக சிங்கிள் எடுத்துவிட்டு, பின்னர் வருத்தப்படக்கூடாது. என தெரிவித்தார்.