கிரிக்கெட்

காற்றுமாசு காரணமாக சுவாச கவசம் அணிந்து விளையாடிய இலங்கை வீரர்கள்

டெல்லி டெஸ்ட் கிரிக்கெட்டில் காற்றுமாசு காரணமாக இலங்கை வீரர்கள் சுவாச கவசம் அணிந்து விளையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் காற்று மாசு காரணமாக வாகன ஓட்டிகள் அல்லோலப்படுவது உண்டு. அது கிரிக்கெட் போட்டிக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள சம்பவம் இப்போது நடந்துள்ளது.

இந்தியா - இலங்கை இடையே 3-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. காற்று மாசுவின் தாக்கத்தால் மைதானத்தில் புகைமண்டலமாக காட்சி அளித்ததால் வெளிச்சம் குறைவாகவே காணப்பட்டது.

2-வது நாள் ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இலங்கை வீரர்கள் காற்று மாசு பிரச்சினையை கிளப்பினர். 123-வது ஓவரின் போது இலங்கை வேகப்பந்து வீச்சாளர் காமகே, மூச்சு விடுவதற்கு சிரமப்படுவதாக தங்கள் அணி கேப்டனிடமும், நடுவர்களிடமும் புகார் கூறினார். இதனால் 17 நிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது. இதையடுத்து நடுவர்களின் அனுமதியுடன் இலங்கை கேப்டன் சன்டிமால், மேத்யூஸ் உள்ளிட்ட பெரும்பாலான வீரர்கள் சுவாச கவசம் (மாஸ்க்) அணிந்து விளையாடினர். சர்வதேச கிரிக்கெட்டில் காற்று மாசுபாட்டினால் இந்த மாதிரி கவசத்துடன் வீரர்கள் ஆடியது இது தான் முதல் முதல்முறையாகும்.

இதன் பிறகு மேலும் இரண்டு முறை இதே பிரச்சினைக்காக ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, இலங்கை அணியின் மேலாளர் குருசிங்கா ஆகியோர் மைதானத்திற்குள் வந்து நடுவர்களிடம் பேசினர். இந்திய கேப்டன் விராட் கோலி, இலங்கை வீரர்களின் செய்கையால் மிகுந்த அதிருப்திக்குள்ளானார். இதே போல் குழுமியிருந்த ஏறக்குறைய 20 ஆயிரம் ரசிகர்களும் இலங்கை வீரர்களுக்கு எதிராக குரல் எழுப்பினர்.

ஆனால் கோலி ஆட்டம் இழந்ததும் இலங்கை வீரர்கள் சுவாச கவசத்தை கழற்றி விட்டனர். இதே போல் அவர்கள் பேட் செய்த போதும் அதை அணியவில்லை. இந்திய வீரர்களும் சிரமமின்றி பீல்டிங் செய்ததை காண முடிந்தது. இலங்கை வீரர்களை, ரசிகர்கள் டுவிட்டரில் சாடியுள்ளனர். இது போன்ற நடிப்புக்காக இலங்கை வீரர்களுக்கு ஆஸ்கார் விருது கொடுக்கலாம் என்று வர்ணனை செய்துள்ளனர்.

அதே சமயம் மைதானத்தை விட்டு வெளியேறியதும் தங்கள் அணியில் மூன்று வீரர்கள் வாந்தி எடுத்ததாக இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளர் நிக் போத்தாஸ் நிருபர்களிடம் கூறினார். வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல் வாந்தி எடுத்த போது, போட்டி நடுவர் டேவிட் பூனும் உடனிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதே நிலைமை நாளையும் (அதாவது இன்று) நீடித்தால் தொடர்ந்து விளையாடுவீர்களா? என்று அவரிடம் நிருபர்கள் கேட்ட போது, அதை போட்டி நடுவரும், கள நடுவரும் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என்று பதில் அளித்தார்.

இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் கூறுகையில், விராட் கோலி கிட்டத்தட்ட 2 நாட்கள் முழுமையாக பேட்டிங் செய்திருக்கிறார். அவருக்கு எந்த சுவாச கவசமும் தேவைப்படவில்லை. சீதோஷ்ண நிலைமை இரு அணிக்கும் ஒரே மாதிரி தான் இருக்கிறது. ஆனால் எங்களது வீரர்களுக்கு இதில் எந்த உடல்நலக்கோளாறும் வரவில்லையே என்றார்.

மைதானத்திற்கு வந்த 20 ஆயிரம் ரசிகர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்திய வீரர்களும் இயல்பாகவே உள்ளனர். ஆனால் இலங்கை அணியினர் மட்டும் பிரச்சினையை கிளப்புவது வியப்பாக உள்ளது. இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் பேசுவோம் என்று இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்பு தலைவர் அனில் கண்ணா கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு