பெங்களூரு,
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் (5 நாள் ஆட்டம்) இறுதி ஆட்டம் பெங்களூருவில் இந்திய கிரிக்கெட் வாரிய பயிற்சி மையத்தின் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் தெற்கு மண்டலம்- மத்திய மண்டல அணிகள் மோதுகின்றன. டாஸ் ஜெயித்த மத்திய மண்டல கேப்டன் ரஜத் படிதார் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தெற்கு மண்டல பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 63 ஓவர்களில் 149 ரன்னில் சுருண்டனர். அதிகபட்சமாக தன்மய் அகர்வால் 31 ரன்கள் எடுத்தார். கேப்டன் முகமது அசாருதீன் 4 ரன்னில் போல்டானார். மத்திய மண்டலம் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் சரண்ஷ் ஜெயின் 5 விக்கெட்டும், குமார் கார்த்திகேயா 4 விக்கெட்டும் சாய்த்தனர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மத்திய மண்டல அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 19 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 50 ரன் எடுத்திருந்தது. தனிஷ் மாலேவர் 28 ரன்னுடனும், அக்ஷய் வாட்கர் 20 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த தனிஷ் மாலேவர் 53 ரன்னிலும், அக்ஷய் வாட்கர் 22 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த சுபம் ஷர்மா 6 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரஜத் படிதார் - யாஷ் ரத்தோட் இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது.
இருவரும் சதம் அடித்து அசத்தினர். இதில் படிதார் 101 ரன்னிலும், அடுத்து வந்த உபேந்திர யாதவ் 5 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் மத்திய மண்டல அணி 104 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 384 ரன்கள் எடுத்துள்ளது.
தற்போது வரை மத்திய மண்டல அணி 235 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. யாஷ் ரதோட் 137 ரன்களுடனும், சரண்ஷ் ஜெயின் 47 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.