கிரிக்கெட்

துலீப் கோப்பை கிரிக்கெட் அரைஇறுதி: தெற்கு மண்டல அணி 195 ரன்னில் 'ஆல்-அவுட்'

துலீப் கோப்பை கிரிக்கெட் அரைஇறுதி போட்டியில் தெற்கு மண்டல அணி 195 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.

தினத்தந்தி

பெங்களூரு,

துலீப் கோப்பை கிரிக்கெட்டில் வடக்கு-தெற்கு மண்டல அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் வடக்கு மண்டலம் 198 ரன்னில் அடங்கியது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தெற்கு மண்டல அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 63 ரன்கள் எடுத்து இருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த தெற்கு மண்டல அணி 54.4 ஓவர்களில் 195 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. மயங்க் அகர்வால் 76 ரன்னிலும், (115 பந்து, 10 பவுண்டரி), திலக் வர்மா 46 ரன்னிலும் (101 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார்கள். இதே போல் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் 12 ரன்னும், சாய் கிஷோர் 21 ரன்னும் எடுத்தனர். பின்னர் 3 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய வடக்கு மண்டல அணி ஆட்ட நேர முடிவில் 11 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 51 ரன்கள் எடுத்துள்ளது.

ஆலூரில் நடக்கும் மத்திய மண்டலத்துக்கு எதிரான மற்றொரு அரைஇறுதியில் முதல் நாளில் 8 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்து இருந்த மேற்கு மண்டல அணி 2-வது நாளான நேற்று 220 ரன்னில் ஆட்டமிழந்தது. கடைசி 2 விக்கெட்டையும் சாய்த்த ஷிவம் மாவி மொத்தம் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய மத்திய மண்டல அணி 31.3 ஓவர்களில் 128 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ரிங்கு சிங் 48 ரன்னும், துருவ் ஜூரெல் 46 ரன்னும் சேர்த்தனர். மேற்கு மண்டல இடக்கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஜான் நவாஸ்வல்லா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் 92 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய மேற்கு மண்டல அணி நேற்றைய முடிவில் 39 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. பிரித்வி ஷா 25 ரன்னிலும், கேப்டன் பிரியங்க் பன்சால் 15 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 52 ரன்னிலும் வீழ்ந்தனர். புஜாரா 50 ரன்னுடனும், சர்ப்பாஸ் கான் 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்