கிரிக்கெட்

இந்தியா ’ஏ’அதிரடி பேட்டிங்... ஆப்கானிஸ்தான் ’ஏ’க்கு 320 ரன்கள் இலக்கு

அதிகபட்சமாக திலக் வர்மா 59 ரன்கள் எடுத்தார்.

தம்புல்லா,

இலங்கையின் தம்புல்லாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா-ஏ அணி இன்று லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-ஏ அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்-ஏ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதிரடியான தொடக்கம் கொடுத்த ஆர்யா - சூர்யவன்சி ஜோடி

முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் களமிறங்கிய இந்தியா-ஏ அணிக்கு தொடக்க வீரர்களான பிரியான்ஷ் ஆர்யா மற்றும் வைபவ் சூர்யவன்சி சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர். அதிரடியாக விளையாடிய சூர்யவன்சி 28 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் பிரியான்ஷ் ஆர்யா அரைசதம் கடந்து அசத்தினார். 42 பந்துகளில் 58 ரன்கள் எடுத்திருந்த ஆர்யா ஆட்டமிழந்தார். ருதுராஜ் 31 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

அரைசதம் விளாசிய குமார் குஷாக்ரா

அடுத்து களமிறங்கிய கேப்டன் திலக் வர்மாவுடன் இணைந்த குமார் குஷாக்ரா பொறுப்புடன் விளையாடினார். சிறப்பாக ஆடிய அவர் 67 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குமார் குஷாக்ரா வெளியேறிய பிறகு களமிறங்கிய சூர்யான்ஷ் ஷெட்ஜ் 9 பந்துகளில் 7 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் நிலைத்து நின்ற திலக் வர்மா 75 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதிக்கட்டத்தில் ஸ்கோரை உயர்த்திய சிந்து - நிகம்

அதன்பின் நிஷாந்த் சிந்து மற்றும் விப்ராஜ் நிகம் இணைந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அப்போது விப்ராஜ் நிகம் 30(20) ரன்களில் அவுட்டாக 50 ஓவர்கள் முடிவில் இந்தியா-ஏ அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 59 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 320 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான்-ஏ அணி களமிறங்க உள்ளது.