புதுடெல்லி,
நாட்டிங்காமில் கடந்த 2002-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது 17 வயதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக அறிமுகமாகி குழந்தை போன்ற முகத்தால் அனைவரது கவனத்தையும் கவர்ந்தவர் பார்த்தீவ் பட்டேல். டெஸ்ட் போட்டியில் இளம் வயதில் களம் கண்ட 4-வது இந்திய வீரர் என்ற பெருமைக்குரிய அவர் இந்திய அணிக்காக 25 டெஸ்டில் ஆடி 6 அரைசதத்துடன் 934 ரன்கள் எடுத்து இருப்பதுடன், 62 கேட்ச் மற்றும் 10 ஸ்டம்பிங் செய்துள்ளார். 38 ஒருநாள் போட்டியில் விளையாடி 4 அரைசதத்துடன் 736 ரன்கள் எடுத்துள்ளதுடன், 30 கேட்ச் மற்றும் 9 ஸ்டம்பிங் செய்து இருக்கிறார். இரண்டு 20 ஓவர் போட்டியிலும் விளையாடியுள்ளார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த அவர் 194 முதல் தர போட்டியில் ஆடி 27 சதம், 62 அரைசதத்துடன் 11,240 ரன்கள் குவித்துள்ளார். கடைசியாக 2018-ம் ஆண்டு ஜனவரியில் ஜோகனஸ்பர்க்கில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடிய அவர் அதன் பிறகு இந்திய அணியில் இடம் பெறவில்லை. விக்கெட் கீப்பிங்கில் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஜொலிக்காததும், தினேஷ் கார்த்திக், டோனி ஆகியோரின் ஏற்றமும் பார்த்தீவ் பட்டேலின் வாய்ப்பை பாதித்தது.
ஐ.பி.எல். போட்டிகளில் தொடர்ந்து ஆடிய பார்த்தீவ் பட்டேல் 2010-ம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பட்டம் வென்ற போதும், 2015, 2017-ம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணி மகுடம் சூடிய போதும் அந்த அணியில் அங்கம் வகித்தார். 2017-ல் மும்பை அணிக்காக அதிக ரன்கள் (395 ரன்கள்) குவித்தார். இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த அவருக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் 35 வயதான பார்த்தீவ் பட்டேல் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டுவிட்டர் மூலம் நேற்று அறிவித்தார். அதில் கிரிக்கெட் ஆட்டத்தை உண்மையாகவும், உத்வேகமாகவும் ஆடிய பெருமையுடனும், அமைதியுடனும் விடைபெறுகிறேன். 17 வயதிலேயே என் மீது நம்பிக்கை வைத்து இந்திய அணியில் விளையாட வாய்ப்பு அளித்து வழிநடத்திய இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு மிகுந்த நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.