பிரிஜ்டவுன்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இங்கிலாந்து அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது.
இதன்படி இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பிரிஜ்டவுனில் நேற்று (புதன்கிழமை) தொடங்கியது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி வெஸ்ட் இண்டிஸ் அணியில், கிரிஸ் கெயில், ஜான் சாம்பெல் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் சாம்பெல் 30(28) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷாய் ஹோப் சிறப்பாக ஆடி தனது அரைசதத்தினை பதிவு செய்திருந்த நிலையில் 64(65) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஹெட்மயர் 20(15) ரன்னில் வெளியேறினார்.
தனது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த நட்சத்திர வீரர் கிரிஸ் கெயில் அடித்த ஒரு சிக்சர் 121 மீட்டர் தூரத்திற்கு பறந்தது. மற்றொரு முறை பந்து மைதானத்திற்கு வெளியே சென்றது. 35ஓவர் முடிந்திருந்த போது அந்த அணி 3 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது 39 வயதான கிறிஸ் கெய்ல் 100 ரன்களுடன் (100 பந்து, 3 பவுண்டரி, 9 சிக்சர்) களத்தில் இருந்தார். இது அவருக்கு 24-வது சதமாகும். மேலும் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (20 ஓவர், ஒரு நாள் மற்றும் டெஸ்ட்) அதிக சிக்சர் நொறுக்கியவர் என்ற சாதனையையும் கெய்ல் படைத்தார்.
பின்னர் அடுத்த விக்கெட்டாக நிகோலஸ் பூரன் (0)ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய டேரன் பிராவோ அதிரடியில் கலக்கினார். அவர் 40(30) ரன் எடுத்த நிலையில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக கேப்டன் ஜேசன் ஹொல்டர், கெயிலுடன் ஜோடி சேர்ந்தார். அப்போது சிறப்பாக விளையாடி வந்த கிரிஸ் கெயில் 135(125) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஹோல்டர் 16(12) ரன்னிலும், பிரித்வெயிட் 3(3) ரன்னிலும் வெளியேறினர்.
முடிவில் அதிரடியில் கலக்கிய நர்ஸ் 25(8) ரன்களுடனும், பிஷோ 9(7) ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதன்மூலம் வெஸ்ட் இண்டிஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 360 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக அடில் ரஷித், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் 3 விக்கெட்டுகளும், வோக்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
361 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய், ஜானி பரிஸ்டோ ஆகியோர் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். சிறப்பான துவக்கம் தந்த இந்த ஜோடியில் பரிஸ்டோ 34(33) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். பின்னர் ஜேசன் ராயுடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். தனது அதிரடியின் மூலம் அணியின் ரன் வேகத்தை அதிகரித்து கொண்டிருந்த ஜேசன் ராய் தனது சதத்தினை பதிவு செய்தார். இங்கிலாந்து அணி 205 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜேசன் ராய் 123(85) ரன்களில் கேட்ச் மூலம் வெளியேற்றப்பட்டார். அடுத்ததாக ஜோ ரூட்டுடன் கேப்டன் இயான் மோர்கன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய இந்த இருவரும் தங்களது அரைசத்தினை பதிவு செய்தனர். இதில் கேப்டன் மோர்கன் 65(51) ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினார். ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியினை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஆட்டத்தின் இறுதிகட்டத்தில் ஜோ ரூட் 102 (97) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
முடிவில் பென் ஸ்டோக்ஸ் 20(25) ரன்களும், பட்லர் 4(1) ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 48.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 364 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டிஸ் அணியில் அதிகபட்சமாக ஹோல்டர் 2 விக்கெட்டுகளும், பிஷோ, தாமஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.