அடிலெய்டு,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்தது.
அடுத்ததாக பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவு மோதலாக அடிலெய்டில் இன்று தொடங்கியது. இளஞ்சிவப்பு (பிங்க்) நிற பந்தில் நடக்கும் இந்த் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய பிரித்வி ஷா ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய புஜாராவுடன் ஜோடி சேர்ந்த மயங்க் அகர்வால் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த புஜாரா 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக கேப்டன் விராட் கோலியுடன், ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் சீரான ரன் குவிப்பால் அணியின் ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது. இந்த ஜோடியில் சிறப்பாக ஆடிய கேப்டன் கோலி தனது அரை சதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 74 ரன்களில் ரன் அவுட் ஆனார். அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரகானே 42 ரன்களில் பெவிலியன் திரும்பினார். விராட் கோலியின் ரன் அவுட்டால் ஏற்பட்ட திருப்பத்தால் ரன்ரேட் விகிதம் சரிந்தது. அடுத்து களமிறங்கிய ஹனுமான் விஹாரி 16 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 89 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் விருத்திமான் சகா 9 ரன்களும், ஆர்.அஸ்வின் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா அணியின் சார்பில் அதிகபட்சமாக ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும், பேட் கம்மின்ஸ், ஹேசில் வுட் மற்றும் லியோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.