சில்ஹெட்,
இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கையும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்காளதேசமும் கைப்பற்றின.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சில்ஹெட்டில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய நிஷான் மதுஷ்கா 2 ரன், கருணாரத்னே 17 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இதையடுத்து களம் இறங்கிய குசல் மெண்டிஸ் 16 ரன், மேத்யூஸ் 5 ரன், சண்டிமால் 9 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் இலங்கை அணி 57 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து களம் இறங்கிய தனஞ்செயா டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் இணை நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டது.
இருவரும் நிதானமாக ஆடி சதம் அடித்தனர். இதில் டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் இருவரும் தலா 102 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இறுதியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 68 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்கள் எடுத்தது.
வங்காளதேசம் தரப்பில் கலீத் அகமது, நஹித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 32 ரன்கள் எடுத்துள்ளது.
வங்காளதேச தரப்பில் ஜாகிர் ஹசன் 9 ரன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ 5 ரன், மொமினுல் ஹக் 5 ரன் எடுத்து அவுட் ஆகினர். மஹ்முதுல் ஹசன் ஜாய் 9 ரன்னுடனும், தைஜுல் இஸ்லாம் 0 ரனுடனும் களத்தில் உள்ளனர். நாளை 2ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.