நியூ சண்டிகர்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் நியூசண்டிகாரில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.
இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச உள்ளது.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் லோகேஷ் ராகுல், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், துருவ் ஜுரெல் என முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் இடம் பெற்றிருப்பதால் போதிய அனுபவம் இல்லாத ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி கடைசியாக கடந்த நவம்பரில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் 0-2 என்ற கணக்கில் தோற்று கடும் விமர்சனத்திற்குள்ளானது. எனவே உள்ளூரில் இந்த சீசனை வெற்றியோடு தொடங்குவதற்கு இது அருமையான வாய்ப்பாகும்.
சர்வதேச டெஸ்ட் அரங்கில் 2018-ம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் அறிமுகம் ஆனது. அறிமுக டெஸ்டிலேயே இந்தியாவுடன் பெங்களூருவில் மோதிய ஆப்கானிஸ்தான் 2-வது நாளிலேயே இன்னிங்ஸ் தோல்வியை தழுவியது. இதுவரை 12 டெஸ்டுகளில் ஆடியுள்ள ஆப்கானிஸ்தான் 4-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டுள்ளது. ஆனால் பெரிய அணிகளை வென்றதில்லை. இந்த முறையும் முடிந்த அளவுக்கு கடும் சவால் அளிக்க முயற்சிப்பார்கள். பிரதான சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்குவது அவர்களுக்கு நிச்சயம் பின்னடைவு தான். அண்மையில் ஐ.பி.எல். போட்டிகள் நடந்த நியூசண்டிகாரில் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும். இது இந்தியாவின் 31-வது டெஸ்ட் மைதானமாகும்.
காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.