கிரிக்கெட்

'டிரா’வை நோக்கி செல்லும் கான்பூர் டெஸ்ட்

5-ம் நாள் உணவு இடைவேளை வரை நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்துள்ளது.

தினத்தந்தி

கான்பூர்,

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன்பார்க் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 345 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் அதிகபட்சமாக 105 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால், 49 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது.

இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்து 283 ரன்கள் முன்னிலை வகித்த நிலையில் நேற்று டிக்ளேர் செய்தது.

பின்னர் 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 4 ரன்கள் எடுத்துள்ளது.

டெஸ்ட் போட்டியின் இறுதி நாளான இன்று 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. அதேபோல், 9 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி என்ற நிலையில் இந்தியா களமிறங்கியது.

நியூசிலாந்து அணியின் டாம் லாதம் மற்றும் வில்லியம் சொமிர்வெலி ஆகியோர் களத்தில் இருந்தனர். இரு வீரர்களும் இந்திய அணியின் பந்து வீச்சை வெகுவாக சமாளித்தனர்.

இதனால், உணவு இடைவேளை வரை நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்துள்ளது. பொறுப்புடன் ஆடிய டாம் லாதம் 96 பந்துகளில் 35 ரன்களுடனும், வில்லியம் 109 பந்துகளில் 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

நியூசிலாந்து அணி வெற்றிபெற இன்னும் 205 ரன்கள் தேவைப்படுகிறது. அதேபோல, இந்த அணி வெற்றிபெற இன்னும் 9 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது.

இந்த ஆட்டத்தில் இன்னும் அரைநாளே எஞ்சியுள்ள நிலையில் இப்போட்டி டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.