பெங்களூரு,
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராக கடந்த பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்ட சஞ்சய் பாங்கர் அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக நேற்று நியமிக்கப்பட்டார்.
பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த சிமோன் காடிச் (ஆஸ்திரேலியா) திடீரென விலகியதை அடுத்து சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 2-வது கட்ட ஐ.பி.எல். போட்டியின் போது அந்த அணியின் கிரிக்கெட் ஆபரேட்டிங் இயக்குனர் மைக் ஹெஸ்சென் (நியூசிலாந்து) தலைமை பயிற்சியாளர் பணியை கூடுதல் பொறுப்பாக கவனித்தார். புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட்டு விட்டதால் இனிமேல் ஹெஸ்சென் இயக்குனர் பொறுப்பை மட்டும் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சஞ்சய் பாங்கர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு தலைமை பயிற்சியாளராக இருப்பார் என்று பெங்களூரு அணியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
49 வயதான சஞ்சய் பாங்கர் இந்திய அணிக்காக 12 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் ஆல்-ரவுண்டராக விளையாடி இருந்தார். இவர் ஏற்கெனவே இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக 5 ஆண்டுகள் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.