சென்னை,
இந்தியா மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கூல் கேப்டன் என்ற பெயரை பெற்றவர் எம். எஸ் தோனி. எதிரணி வீரர்களும் தோனிக்கு மரியாதை கொடுக்க காரணம் அவரது நிதானமான அணுகுமுறை. நெருக்கடியான நேரத்தில்கூட நிதானத்துடன் தெளிவான முடிவுகளை எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வதில் தோனி கை தேர்ந்தவர்.
இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தோனி, ஆடுகளத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் தான் கூலாக இருப்பதற்கான காரணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து தோனி பேசுகையில், " உண்மையை சொல்ல வேண்டும் என்றல் நாங்கள் களத்தில் இருக்கும் போது, எந்த தவறும் செய்ய விரும்பவதில்லை. ஒரு வீரர் கேட்ச்களை தவறவிடலாம் அல்லது ஒருவர் மிஸ்பீல்ட் செய்யலாம்.
ஆனால் அந்த நேரத்தில் கோபப்பட்டு எந்த பயனும் இல்லை. ஏற்கனவே 40,000 பேர் மைதானத்தில் இருந்து போட்டியை பார்க்கிறார்கள் மற்றும் கோடிக்கணக்கான மக்கள் போட்டியைப் தொலைக்காட்சிகளில் பார்க்கிறார்கள். ஒரு வீரர் தவறு செய்தால் அதற்கான காரணம் என்ன என்று நான் ஆராய்வேன்.
ஒரு வீரர் மைதானத்தில் 100 சதவீதம் கவனத்துடன் இருந்து, கேட்சை தவறவிட்டால், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அந்த வீரர் அதற்கு முன் பயிற்சியின் போது போது எத்தனை கேட்ச்கள் பிடித்தார் என்று பார்ப்பேன். அதில் அவருக்கு சிக்கல் இருந்து அவர் தீர்வு காண முயற்சிக்கிறாரா என்று கவனிப்பேன்.
அவர் ஒரு கேட்சை கைவிட்டார் என்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக இந்த எல்லா அம்சங்களிலும் நான் கவனம் செலுத்துவேன். நாம் நமது நாட்டுக்காக விளையாடுகிறோம். சில நேரங்களில் தவறுகள் மோசமானதாக இருக்கும். நாம் எவ்வாறு நமது நாட்டுக்காக விளையாடுகிறோமோ அதே போல் தான் எதிரணி வீரர்களும்" என தோனி தெரிவித்துள்ளார்.