கிரிக்கெட்

77 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது குஜராத்

ரஷீத் கான் 4 விக்கெட்டுகளும், ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளும், ரபடா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

புதுடெல்லி

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று நடந்த 52-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின.

கேப்டன் ஜெய்ஸ்வால் பந்துவீச்சை தேர்வு செய்ததும், குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. சாய் சுதர்சன் 55 ரன்களும், கில் 84 ரன்களும் எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.

இதனால், 230 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. அந்த அணியின் கேப்டன் ஜெய்ஸ்வால் 3 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். வைபவ் சூர்யவன்ஷி 36 ரன்கள் எடுத்திருந்தபோது சிராஜ் பந்து வீச்சில் அர்ஷத் கானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதிக அளவாக ரவீந்திர ஜடேஜா (38), துருவ் ஜுரேல் (24) ரன்கள் எடுத்தனர். அந்த அணி 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களே எடுத்திருந்தது. இதனால், குஜராத் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. ரஷீத் கான் 4 விக்கெட்டுகளும், ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளும், ரபடா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.