ஆமதாபாத்,
10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற 42-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்தித்தது.
இந்த போட்டிக்கான டாஸை வென்ற குஜராத் அணியின் கேப்டன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் குஜராத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பெங்களூரு அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய கில் அதிரடி துவக்கம் கொடுத்தார். ஆனால் மறுபுறம் நின்ற சாய் சுதர்சன் 6(5) ரன்களில் அவுட்டானார்.
இதையடுத்து கில்லுடன் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய கில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் 43(18) ரன்களில் அவுட்டானார். பின்னர் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். அதிரடியாக ஆடிய ஜோஸ் பட்லர் 39(19) ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஷாருக்கான் 8(8) ரன்களிலும் வாஷிங்டன் சுந்தர் 12(12) ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
பின்னர் ராகுல் தெவாட்டியா-ஜேசன் ஹோல்டர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். அப்போது ஹோல்டர் 12(10) ரன்களில் அவுட்டானார். இறுதியில் 15.5 ஓவர்களில் குஜராத் அணி இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
இதன் மூலம் முந்தைய ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு குஜராத் பதிலடி கொடுத்துள்ளது.