மும்பை,
ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திற்குப் பிறகு, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கடந்த சில போட்டிகளாக விளையாடவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், ஹர்திக் பாண்டியாவின் தற்போதைய நிலை குறித்து அந்த அணியின் வீரர் ஷர்துல் தாகூர் விளக்கம் அளித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஷர்துல் தாக்கூர், ஹர்திக் பாண்டியா குறித்து பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவர் கூறுகையில், "ஹர்திக் பாண்டியா காயமடைந்துள்ளார். அதனால் தான் கடந்த சில போட்டிகளில் அவரால் விளையாட முடியவில்லை. கடந்த 10-ம் தேதி ஆர்சிபி-க்கு எதிரான போட்டிக்காக அவர் ராய்ப்பூர் வந்திருந்தார், ஆனால் முழு பிட்னஸ் இல்லாததால் விளையாடவில்லை. தற்போது மும்பையில் தீவிரப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அடுத்த வாரம் புதன்கிழமை (மே 20) கொல்கத்தாவில் நடைபெறவுள்ள கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்று நம்புகிறோம்" என்றார்.
அடுத்த ஐபிஎல் சீசனில் ஹர்திக் பாண்டியா வேறு அணிக்கு மாற்றப்படப் போகிறார் என்ற வதந்திக்கு பதிலளித்த ஷர்துல், "சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஏதாவது வதந்திகள் பரவிக்கொண்டேதான் இருக்கும். அதில் சில உண்மையாக இருக்கலாம், சில பொய்யாக இருக்கலாம். ஆனால், இறுதி முடிவை அணி நிர்வாகம் மட்டுமே எடுக்கும்" என்று கூறினார்.
2022-ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்குக் கேப்டனாக இருந்து கோப்பையை வென்று கொடுத்து, 2024-ல் மீண்டும் மும்பை அணிக்குத் திரும்பிய ஹர்திக் பாண்டியாவுக்கு இந்த சீசன் மிகக் கடினமாக அமைந்துள்ளது. விளையாடிய 8 போட்டிகளில் வெறும் 146 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள அவரது ஸ்ட்ரைக் ரேட் 136-ஆகக் குறைந்துள்ளது. பந்துவீச்சிலும் 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ள அவர், ஓவருக்கு சராசரியாக 12 ரன்களை வாரி வழங்கியுள்ளார்.