* இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை ஹர்திக் பாண்ட்யா படைத்துள்ளார். இதற்கு முன்பு சந்தீப் பட்டீல், கபில்தேவ் ஆகியோர் ஒரு ஓவரில் தலா 24 ரன்கள் எடுத்ததே இந்திய வீரரின் அதிகபட்சமாக இருந்தது. பாண்ட்யா அந்த ஓவரின் கடைசி பந்தை விளாச முயற்சிக்காமல் தடுத்து ஆடினார். அதில் ஒரு பவுண்டரி சென்றிருந்தால் உலக சாதனையாக மாறியிருக்கும்.
ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா (28 ரன், பவுலர் ராபின் பீட்டர்சன், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2003), ஆஸ்திரேலியாவின் ஜார்ஜ் பெய்லி (28 ரன், பவுலர் ஆண்டர்சன், இங்கிலாந்துக்கு எதிராக 2013), பாகிஸ்தானின் அப்ரிடி (27 ரன், பவுலர் ஹர்பஜன்சிங், இந்தியாவுக்கு எதிராக 2006) ஆகியோர் ஒரே ஓவரில் அதிக ரன்கள் எடுத்த சாதனையாளர்களின் பட்டியலில் பாண்ட்யாவுக்கு முன்பாக இருக்கிறார்கள்.
*டெஸ்ட், ரஞ்சி போட்டி உள்ளிட்டவை முதல்தர கிரிக்கெட்டாக அழைக்கப்படுகிறது. முதல்தர கிரிக்கெட்டில் தனது முதல் செஞ்சுரியை டெஸ்ட் போட்டியின் மூலம் நிறைவேற்றிய 5வது இந்தியர் பாண்ட்யா ஆவார். விஜய் மஞ்சரேக்கர், கபில்தேவ், அஜய் ரத்ரா மற்றும் ஹர்பஜன்சிங் ஏற்கனவே இவ்வாறு சதங்கள் அடித்துள்ளனர்.
*2வது நாள் ஆட்டம் தொடங்கி உணவு இடைவேளைக்குள் ஹர்திக் பாண்ட்யா 107 ரன்கள் சேகரித்தார். உணவு இடைவேளைக்குள் 100 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்தியர் பாண்ட்யா தான்.
*டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து 3 பந்தில் சிக்சர்கள் அடித்த 3வது இந்தியர் என்ற சிறப்பை பாண்ட்யா பெற்றுள்ளார். கபில்தேவ், டோனி ஏற்கனவே இத்தகைய சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.
*இந்த இன்னிங்சில் ஹர்திக் பாண்ட்யா 7 சிக்சர் விரட்டினார். இன்னும் ஒரு சிக்சர் அடித்திருந்தால் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் நொறுக்கிய இந்தியரான நவ்ஜோத் சித்துவின் (1994ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக) சாதனையை சமன் செய்திருப்பார்.
*பாண்ட்யா 86 பந்துகளில் சதத்தை கடந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர் ஒருவரின் 5வது அதிவேக சதமாக இது பதிவானது. கபில்தேவ் (74 பந்து), அசாருதீன் (74 பந்து), ஷேவாக் (78 பந்து), ஷிகர் தவான் (85 பந்து) முதல் 4 இடங்களில் இருக்கிறார்கள்.
* இந்த தொடரில் இதுவரை 36 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளன. இலங்கை மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கை இது தான்.