சார்ஜா,
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 25-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதின. இப்போட்டியில், இலங்கையை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா திரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசியது. அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 142 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து, 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்தது.
இப்போட்டியின் 15-வது ஓவரை, இலங்கை அணியின் வணின்டு ஹசரங்கா வீசினார். ஹசரங்கா வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தில், மார்க்ரம் பவுல்ட் ஆகி வெளியேறினார்.
பின்னர், ஹசரங்கா 18-வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய ப்ரெடோரியஸ், அடுத்த பந்திலேயே டக்-அவுட் ஆகி வெளியேறினார்.
இதன்மூலம், ஹசரங்கா ஹாட்ரிக் (3) விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில், அபு தாபியில் நடைபெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில், அயர்லாந்து அணியின் கர்ட்டிஸ் கேம்ப்பர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
இதற்கிடையில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ப்ரெட் லீ மற்றும் இலங்கையின் திசாரா பெரேரா மற்றும் மலிங்கா ஆகியோர் சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 வடிவ போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளனர். அந்த வகையில், ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி ப்ரெட் லீ, பெரேரா, மலிங்கா வரிசையில் ஹசரங்காவும் இணைந்துள்ளார்.
24 வயதான இலங்கையை சேர்ந்த ஹசரங்கா ஒரு லெக்-பிரேக் சுழற்பந்துவீச்சாளர் ஆவார்.அவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தனது அறிமுக ஒருநாள் போட்டியிலும் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.