கிரிக்கெட்

பாண்ட்யா, கே.எல் ராகுல் சர்ச்சை கருத்து: ”பாடம் கற்றுக்கொண்டேன்” கரண் ஜோஹர் கருத்து

பாண்ட்யா, கே.எல் ராகுல் சர்ச்சை கருத்துக்களை கூறிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கரண் ஜோஹர் இவ்விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவித்து உள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா மற்றும் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் ஆகியோர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறி வசமாக சிக்கிக் கொண்டனர். இவர்கள் இருவரும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க உடனடியாக தடை விதித்த இந்திய கிரிக்கெட் வாரியம், குறை தீர்ப்பு அதிகாரியை நியமித்து இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. தற்காலிக நிவாரணமாக இருவர் மீதான தடையை கிரிக்கெட் வாரியம் நீக்கியது.

இந்த நிலையில், பாண்ட்யா, ராகுல் ஆகியோர் கலந்து கொண்டு சர்ச்சை கருத்தை தெரிவித்த காஃபி வித் கரண் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரபல திரைப்பட இயக்குநர் கரண் ஜோஹர் இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். கரண் ஜோஹர் கூறியதாவது:- இச்சம்பவத்திற்கு நானே பொறுப்பு என நான் கருதினேன். ஏனெனில், இது என்னுடைய நிகழ்ச்சி. நான் தான் அவர்களை விருந்தினர்களாக அழைத்தேன். எனவே, இந்த நிகழ்ச்சிகளில் ஏற்படும் எதிர்வினைகளுக்கு நானே பொறுப்பானவன். சில நேரங்களில் நிகழ்ச்சிக்கு பொருந்தாத வகையில், விருந்தினர்களை எல்லைகளை கடந்து பேச வைப்பது நிகழ்ச்சியின் இயல்பாக மாறிவிடுகிறது. விருந்தினர்களின் கருத்துக்கு நான் பொறுப்பேற்க முடியாது. ஆனால், கேள்விகளுக்கு நானே பொறுப்பாவேன்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நான் மிகவும் கடினமான காலகட்டமாக உணர்ந்தேன். நான் மிகவும் குற்ற உணர்ச்சியுடன் இருந்தேன். வீரர்கள் மிகப்பெரிய விலையை கொடுத்து விட்டனர். சில போட்டிகள் விளையாட அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் முதல் கட்டம் கடந்து விட்டது. நான் மிகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வீரர்கள் பேசியது தவறான கணிப்பில் வெளியான தவறுகள் என அவர்கள் உணர்வார்கள். திறமையான வீரர்கள், அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது