சென்னை,
உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் இளம் வீரர் அபிஷேக் சர்மா மீது விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.
லீக் சுற்றில் தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் டக் அவுட் ஆன அபிஷேக், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மட்டுமே 55 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு முக்கியமான ஆட்டமான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்களில் வெளியேறினார்.
இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 13.33 என்ற சராசரியிலும் 131.14 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடனும் வெறும் 80 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் அவரது பார்ம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் பாப் டூ பிளெசிஸ், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றியே அபிஷேக் சர்மாவைக் காப்பாற்றியதாகத் தெரிவித்தார்.
அவர் பேசுகையில் , “இந்திய அணி வெற்றி பெறுவது அபிஷேக்கிற்கு சாதகமானது. அணி வெற்றி பெறும்போது, பார்மில் இல்லாத வீரரின் குறைகள் மறைக்கப்படலாம். ஆனால் அணி தோற்றால், அந்தப் பழி அவர்மீது விழும். கொல்கத்தாவில் இந்தியா தோல்வியடைந்திருந்தால், விரல்கள் அனைத்தும் அபிஷேக் சர்மாவை நோக்கி நீண்டிருக்கும்.”
அபிஷேக் சர்மா மீதான அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த போட்டிகளில் அவர் எப்படி மீள்வார் என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பாக உள்ளது.