கிரிக்கெட்

"எனக்கே அந்த பயம் இருந்தது, ஆனா அவருக்கு..." - சூர்யவன்ஷியை பார்த்து வாட்சன் சொன்ன அந்த விஷயம்

ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் வாட்சன், வைபவ் சூர்யவன்ஷியின் திறமையை புகழ்ந்துள்ளனர்.

சென்னை,

இந்திய டி20 அணியில் 15 வயதிலேயே இடம்பிடித்துள்ள இளம் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷிக்கு உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்-ரவுண்டர் வாட்சன் ஆகியோர் அவரது திறமையை வெகுவாக புகழ்ந்துள்ளனர்.

"அவரை புறக்கணிக்க முடியவில்லை" - டி வில்லியர்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் நிகழ்ச்சியில் பேசிய டி வில்லியர்ஸ், "அவர் இன்னும் சிறிய பையன், அவருக்கு இன்னும் பக்குவம் வரவில்லை என்று கூறி, அனுபவமுள்ள வேறு யாரையாவது தேர்வு செய்திருக்கும். ஆனால், அவர் தன் திறமையால் (அணிக்கான) கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்திருக்கிறார். இந்திய டி20 அணியில் அவருக்கான இடம் தகுதியானதுதான். அவரை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று டி வில்லியர்ஸ் பாராட்டினார்.

வைபவ்வின் பவர்-ஹிட்டிங்கால் வியந்த வாட்சன்

அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷேன் வாட்சன், மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சிக்ஸர்களை பறக்கவிடும் அவரது பவர்-ஹிட்டிங் திறன் தனித்துவமானது என்றும், இளம் வயதிலேயே அதிரடியாக ஆடும் விதம் ஆச்சரியப்பட வைப்பதாகவும் தெரிவித்தார்.

"அவுட் ஆகிவிடுவோம் என்ற பயம் அவரிடம் துளியும் இல்லை. என் கிரிக்கெட் வாழ்க்கையின் பெரும்பகுதியில் நான் போராடிய விஷயம் அதுதான். அந்த பயமற்ற அணுகுமுறைதான் அவரை சிறப்பாக்குகிறது" என்று வாட்சன் கூறினார்.