புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 29 வயதான புவனேஷ்வர்குமார், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் போது வயிற்று பகுதியில் கடும் வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து பரிசோதித்து பார்த்ததில் அவருக்கு குடலிறக்கம் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. அவருக்கு ஆபரேஷன் செய்ய வேண்டியது வரலாம். ஆபரேஷன் செய்யப்பட்டால் அதன் பிறகு அணிக்கு திரும்புவதில் சிக்கல் உருவாகும். ஆனால் அவரது இந்த மோசமான நிலைமைக்கு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி தான் காரணம் என்ற புகார் எழுந்துள்ளது. 2018-ம் ஆண்டில் புவனேஷ்வர்குமார் அடிக்கடி காயத்தில் சிக்கினார். அப்போதெல்லாம் அவர் கிரிக்கெட் அகாடமியில் தான் சிகிச்சை மற்றும் பயிற்சி முறைகளை மேற்கொண்டார். பல முறை ஸ்கேன் எடுத்து பார்த்தபோதிலும் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை, முழுமையாக குணமாகி விட்டார் என்று கூறி கிரிக்கெட் அகாடமி அனுப்பி வைத்தது. முன்கூட்டியே குடலிறக்க பிரச்சினையை தேசிய அகாடமி கண்டறியாதது இந்திய அணி நிர்வாகத்துக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
இதனால் நொந்து போயுள்ள புவனேஷ்வர்குமார் கூறுகையில், இந்த பாதிப்பில் இருந்து நான் எப்போது குணமடைந்து உடல்தகுதியை எட்டி மீண்டும் கிரிக்கெட் களம் திரும்புவேன் என்பது தெரியவில்லை. தேசிய கிரிக்கெட் அகாடமி முடிந்த அளவுக்கு சிறந்தவற்றையே செய்கிறது. ஆனால் எங்கு தவறு நடந்தது, ஏன் இந்த பாதிப்பை முன்கூட்டியே கண்டறியவில்லை என்பது தெரியவில்லை. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தான் தேசிய கிரிக்கெட் அகாடமியிடம் பேச வேண்டும் என்றார்.